Last Updated : 02 May, 2015 07:56 PM

 

Published : 02 May 2015 07:56 PM
Last Updated : 02 May 2015 07:56 PM

தேர்வு எழுத மாட்டுக்கு அனுமதிச்சீட்டு: காஷ்மீரில் வினோதம்

அடுத்த வாரம் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு எழுத, மாடு ஒன்றுக்கு அனுமதி அட்டை வழங்கிய வினோதமான சம்பவம் காஷ்மீரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலிடெக்னிக் டிப்ளமா படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு இந்த அனுமதிச்சீட்டை காஷ்மீர் மாநிலத்தின் தொழில்கல்விக்கான நுழைவுத் தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது. அதில் கச்சீர் கா (பழுப்பு பசு) என்ற மாணவிக்கான அனுமதிச் சீட்டு என்றும் மாணவியின் தந்தையார் பெயருக்குண்டான பகுதியில் குரா தந்த் (செங்காளை) எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பசுவுக்கு பெமினாவில் உள்ள கவர்ண்ட்மெண்ட் டிகிரி காலேஜில் வரும் மே 10 அன்று தேர்வு எழுதுவதற்கான இருக்கை ஒன்றும் ஒதுக்கப்பட்டது இன்னொரு வேடிக்கை.

இவ்விஷயம் வெளியே தெரிந்த பிறகு தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜூனைத் ஆஸிம் மட்டு என்பவர் அனுமதிச் சீட்டின் நகலை சமூக வலைத்தளமான டிவிட்டரில் பதிவேற்றம் செய்துவிட்டார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "தீவிரமான சரிபார்த்தலுக்குப் பிறகே அந்த வாரியம் மாட்டுக்கு ஹால் டிக்கெட் வழங்கியுள்ளது. தவிர, அந்த மாட்டின் பெயரில் வாரியத்துக்கு தேர்வுக் கட்டணம் செலுத்திய விவரமும் என்னிடம் உள்ளது. மாடுகளுக்குக் கூட ஹால் டிக்கெட் தரும் அளவுக்கு கல்வித் துறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதா? இது தொடர்பாக, மாநில கல்வித்துறை அமைச்சர் நயீம் அக்தர் விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கிண்டலடித்துள்ளார்.

மட்டு தெரிவித்துள்ள 'மாட்டு' அனுமதிச்சீட்டு ஆவணங்கள் மாநில அரசின் உத்தரவின்பேரில் உடனடியாக தேர்வு வாரியத்தின் வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

எனினும் பின்னர் முறையற்ற இந்த செயலைக் குறித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை அவர்களின் வலைதளத்திலிருந்து இந்த தேர்வு நுழைவுச்சீட்டு நீக்கப்பட்டதற்கான காரணமும் கேட்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தற்போதைய தலைவருமான ஒமர் அப்துல்லா மட்டுவின் டிவிட்டர் கருத்துக்கு நகைச்சுவை உணர்வுடன் பதிலளித்துள்ளார். "புத்திசாலித்தனம். காச்சிர் காவ் தேர்வு வருகைதர எனது வாழ்த்துக்கள்" என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு விளக்கமளித்துள்ள வாரியத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பரூக் அகமது மிர், "சில இணைய குறும்புக்காரர்கள் செய்த வேலை இது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணைய வழியாக அனுப்பப்பட்டவை. கணினியில் உள்ள மென்பொருளில் மனித, விலங்கு முகங்களை பிரித்தறிய முடியாது. மேலும், அந்த ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள கையெழுத்து என் கைப்பட எழுதப்பட்ட கையெழுத்து அல்ல. அது கணினியில் ஏற்கெனவே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த ஒன்றாகும். இந்த விஷமத்தைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.

இந்த ருசிகரமான குறும்பைச் செய்தவரின் இணையதள முகவரியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x