Last Updated : 25 Apr, 2015 09:16 PM

 

Published : 25 Apr 2015 09:16 PM
Last Updated : 25 Apr 2015 09:16 PM

கருப்புப் பணத்தை மீட்கும் மசோதா பயனற்றது: சுப்பிரமணியன் சுவாமி

இந்தியர்கள் பலர் உலகம் முழுவதும் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்க, மத்திய அரசு கொண்டு வந்துள்ள கருப்புப் பண மீட்பு மசோதா எந்த விதமான பயனையும் தராது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறும்போது,

"கருப்புப் பணத்தை மீட்போம் என்று பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக, கருப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு 'வெளியிடப்படாத அயல்நாட்டு வருமானம் மற்றும் சொத்துகள் (வரி விதிப்பு) சட்ட மசோதா 2015' எனும் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.

என்னுடைய பார்வையில் இந்த மசோதா முழுமை பெறாத ஒன்றாகும். கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்தவுடன் அதற்கு எந்தெந்த கோணங்களில் இருந்து வரி விதிக்கலாம் என்பதை மட்டும்தான் இந்த மசோதா கூறுகிறது. ஆனால் முழுமையாக கருப்புப் பணத்தை மீட்பதற்கு இதில் எந்த வழிகளும் குறிப்பிடப்படவில்லை.

எனவே இது வருமான வரிச் சட்டத்தைப் போல‌ கடுமையான விதிகள் கொண்ட இன்னும் ஒரு சட்டம்தான்.

வெளிநாடுகளில் யாரெல்லாம் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசிடம் இல்லை. இரண்டே இரண்டு வங்கிகள் மட்டும் தங்களிடம் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்ப் பட்டியலைக் கொடுத்துள்ளன.

எனவே, இந்தச் சட்டத்தின் மூலம் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர முடியாது. கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் உள்ள பணத்தை மீட்டு, அதன் மீது வரி விதிக்கும்போது அரசுக்கு வருமானம் கிடைக்கும். அவ்வளவுதான் இந்தச் சட்டத்தால் பயன். எந்த ஒரு நபரையும் தாமாக முன் வந்து தங்களின் வங்கிக் கணக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று நம்மால் கட்டாயப்படுத்த முடியாது.

கருப்புப் பணத்தை மீட்க வேண்டுமானால், உடனடியாக ஓர் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பிறகு வெளிநாட்டு வங்கிகளின் ஒத்துழைப்போடு அங்கு கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்.

நாம் ஏற்கெனவே பல அவசரச் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே இன்னும் ஓர் அவசரச் சட்டம் கொண்டு வரப்படுவதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது. இதனை நாடாளுமன்றத்தில் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இதனை நடைமுறைப்படுத்தினால் ஐக்கிய நாடுகளும் ஆதரவாக இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நம்மால் கருப்புப் பணத்தை முழுமையாக மீட்க முடியும்"

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x