Published : 10 Dec 2014 07:37 PM
Last Updated : 10 Dec 2014 07:37 PM

தயை குணத்தையும் அன்பையும் உலகமயமாக்குவோம்: கைலாஷ் சத்யார்த்தி

நார்வே தலைநகர் ஓஸ்லோவில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் ஆகியோர் பெற்றனர்.

குழந்தைகள் உரிமைக்காக போராடி வரும் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் சேவையை பாராட்டியும், தலிபான் தீவிரவாதிகளின் அடக்குமுறையை எதிர்த்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் போராடி வரும் மலாலாவின் செயலை கவுரவித்தும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் விருது வழங்கிய நார்வே நோபல் கமிட்டி தலைவர் தோர்ப்ஜார்ன் ஜக்லாண்ட் கூறியதாவது: நோபல் பரிசை ஏற்படுத்திய விஞ்ஞானி ஆல்ப்ரெட் நோபல் தனது இதயத்தில் அமைதியின் தூதுவர்கள் என்று கருதி போற்றும் அளவுக்கு தகுதி படைத்தவர்கள் சத்யார்த்தியும், மலாலாவும். இவ்விருதைப் பெறும் ஒருவர் முதியவர், இந்து மதத்தையும் இந்தியாவையும் சேர்ந்தவர். மற்றொருவர் இளம்பெண், இஸ்லாம் மதத்தையும் பாகிஸ்தானையும் சேர்ந்தவர். இது, தேசங்களுக்கு இடையே ஒற்றுமையும், சகோதரத்துவமும் வளர வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தோர்ப்ஜார்ன் ஜக்லாண்ட் கூறினார்.

ரூ. 6 கோடியே 20 லட்சம் பரிசு

இருவருக்கும் 1.1 மில்லின் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 6 கோடியே 20 லட்சம்) பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பதக்கமும், பட்டயமும் அளிக்கப்பட்டுள்ளது.

பரிசை பெற்று கைலாஷ சத்யார்த்தி நிகழ்த்திய உரை:

"இன்று நான் ஆயிரம் மகாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாக்கள் முன்னேறி வந்து நமக்கு அழைப்பு விடுக்கின்றனர். சிறுவர்களும் சிறுமிகளும் இணைந்தனர், நான் இணைந்தேன். உங்களையும் இணையக் கோருகிறேன்.

நாம் அறிவை ஜனநாயகப்படுத்துவோம்

நீதியை உலகப் பொதுமையாக்குவோம்

நாம் அனைவரும் இணைந்து நமது குழந்தைகளுக்காக தயை குணத்தை உலகமயமாக்குவோம்.

சுரண்டலிருந்து கல்விக்கும், வறுமையிலிருந்து பகிர்ந்து கொள்ளும் வளமை நோக்கியும் நாம் நடைபோடுவோம்.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும், வன்முறையிலிருந்து அமைதிக்கும் சமாதானத்திற்கும் நடைபோடுவோம்.

இருளிலிருந்து ஒளிக்கு முன்னேறுவோம், மரணத்திலிருந்து தெய்வீகத்திற்கு முன்னேறுவோம்.

ஒரு குழந்தையாக நாளை பற்றிய தரிசனம் எனக்கு இருந்தது. நாளை என்பது இப்போது இன்று என்றாகியுள்ளது. நானும் இன்று, நீங்களும் இன்று. ஒவ்வொரு குழந்தைக்குமான வாழ்வுரிமையும், சுதந்திர உரிமையும், ஆரோக்கிய உரிமையும், கல்வியுரிமையும் பாதுகாப்பு, கவுரவம், சமத்துவம், சமாதானத்திற்கான உரிமைகளும் இன்றைக்கானது.

இன்று, இருளுக்கு அப்பால், சிமிட்டும் நட்சத்திரங்களில் குழந்தைகளின் புன்னகையைக் காண்கிறேன்.

இன்று, ஒவ்வொரு கடலின் ஒவ்வொரு அலையிலும் நமது குழந்தைகள் விளையாடுவதையும் நடனமாடுவதையும் நான் காண்கிறேன். இன்று ஒவ்வொரு மரம், செடி, கொடி, மலை என்று அனைத்திலும் அன்று எனது வகுப்பறையில் என்னுடன் படித்த அந்தச் சிறுவனைக் காண்கிறேன்.

உங்களில் ஒவ்வொருவரின் உள்ளும் நீங்கள் இதனை உணர விரும்புகிறேன். எனதருமை சகோதர சகோதரிகளே நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் கையை சிறிது கணத்திற்கு உங்கள் இருதயத்தின் மீது வைத்துக் கொள்ள முடியுமா? உங்களுக்குள் உள்ள குழந்தையை நீங்கள் உணர முடிகிறதா? இப்போது இந்தக் குழந்தையை கவனியுங்கள், உங்களால் முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

சுமார் 50 ஆண்டுகளோ அதற்கு அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாகவோ, நான் படித்த பள்ளிக்கூடத்தின் வாசலில் நான் முதல் நாளில் ஷூ பாலிஷ் செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனைக் கண்டேன். நான் எனது ஆசிரியர்களிடம் சில கேள்விகளைக் கேட்டேன்: “அவர் ஏன் வெளியே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்? அவன் ஏன் என்னுடன் பள்ளி வகுப்பறைக்கு வரவில்லை?” என்றேன். என் ஆசிரியர்களிடத்தில் இதற்கு விடையில்லை. ஒருநாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்தச் சிறுவனின் தந்தையிடம் கேட்டேவிட்டேன். அவர் கூறினார்: “ஐயா, நான் இது பற்றி யோசித்ததே இல்லை. நாங்கள் வேலை செய்யவே பிறந்துள்ளோம்” என்றார். எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இப்போதும் அந்த தந்தை கூறியது எனக்கு கோபத்தையே மூட்டுகிறது. அன்று அதனை சவாலாக்கினேன், இப்போதும் அதனை எதிர்த்துப் போராடி வருகிறேன்.

குழந்தைகளுக்கு ஏற்ற கொள்கைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கல்வியிலும், இளம் தலைமுறைக்காகவும் அரசு முதலீடு செய்ய வேண்டும்.

நமக்கு இன்று அவசர உணர்வுடன் தேவைப்படுவது கூட்டு நடவடிக்கைகள், கூட்டு செயல்பாடுகள். ஒவ்வொரு நிமிடமும் முக்கியம், ஒவ்வொரு குழந்தையும் முக்கியம். ஒவ்வொரு குழந்தைப்பருவமும் முக்கியம்.

நமது குழந்தைகளைச் சுற்றிக் காணப்படும் அவநம்பிக்கையை சவாலாக ஏற்கிறேன். மவுனம் காக்கும் பண்பாட்டையும், நடுநிலைகாக்கும் பண்பாட்டையும் நான் சவாலாக ஏற்கிறேன்.

ஆகவே, குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளும் ஒழிய, ஒழிக்கப்பட நாம் ஒவ்வொருவரும் இணைவோம்.

நாகரிகமான சமூகத்தில் அடிமைத்தனம், குழந்தை கடத்தல், குழந்தை திருமணங்கள், குழந்தைத் தொழிலாளி, பாலியல் வன்முறை, கல்வியின்மை ஆகியவற்றுக்கு இடமில்லை. நண்பர்களே இதனை நாம் செய்ய முடியும்.

டெல்வி என்ற சிறுமி பரம்பரையாக கொத்தடிமையாக இருந்த குடும்பத்தில் பிறந்தார். அவரைக் காப்பாற்றி எனது காரில் உட்கார வைத்தவுடன் அந்த 8 வயது சிறுமி கேட்டார்: ஏன் முன்னாலேயே வரவில்லை? என்று அந்தச் சிறுமியின் கோபம் இப்போதும் என்னை நிலைகுலையச் செய்கிறது. அந்தக் கோபம் உலகை உலுக்கக்கூடியது. அவரது கேள்வி நம் அனைவருக்குமானது. நாம் ஏன் முன்பாகவே செல்லவில்லை? நாம் எதற்காகக் காத்திருந்தோம்? இன்னும் எத்தனை டெல்விக்களை காப்பாற்ற முடியாமல் விடப்போகிறோம்? இன்னும் எவ்வளவு சிறுமிகள் கடத்தப்பட, அடிமைப்படுத்தப்பட அனுமதிக்கப்போகிறோம்?

கால்பந்து தைக்கும் அந்த குழந்தைகள் யாருடைய குழந்தைகள்? இன்னும் அவர்கள் விளையாட முடியவில்லையே! சுரங்கத்தொழிலிலும் கல்லுடைப்பதிலும் ஈடுபடும் குழந்தைகள் யார்? சாக்கலேட் சாப்பிட முடியாத ஆனால் கோகோவை பயிர் செய்யும் குழந்தைகள் யார்? இவர்கள் அனைவரும் நம் குழந்தைகள்.

நானும், நீங்களும் அவசரகதி உலகமயமாதல் காலத்தில் வாழ்கிறோம். உயர் வேக இண்டெர்நெட் நம்மை இணைக்கிறது. நம்மை பல விஷயங்கள் இணைக்கிறது.

ஆனால் ஒன்றேயொன்று துண்டிக்கப்பட்டுள்ளது. அதுதான் அன்பு, தயை குணம், கருணை. தனிப்பட்ட கருணையையும் அன்பையும் தயா குணத்தையும் உலகமயமாக்க முயற்சி செய்வோம். செயல்படாத நிலையில் ஏற்படும் கருணையோ, அன்போ அல்ல, மாற்றங்களைக் கொண்டு வரும் அன்பு. அதாவது நீதி, சமத்துவம், சுதந்திரத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் கருணை, அன்பு.

மகாத்மா காந்தி கூறினார்: நாம் உண்மையில் இந்த உலகிற்கு அமைதியை கற்பிக்க வேண்டுமெனில் நாம் குழந்தைகளிடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்.

18 ஆண்டுகளுக்கு முன்பு 103 நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான எனது சகோதர சகோதரிகள் 80,000 கி.மீ. பேரணி சென்றோம். குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சர்வதேச சட்டம் உருவானது. நாங்கள் இதனைச் செய்து காட்டியுள்ளோம்.

ஒரு நபர் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் கேட்கலாம். எனது குழந்தைப்பருவ கதை ஒன்று என் நினைவுக்கு வருகிறது: காட்டில் பெரும் தீ மூண்டது. அனைத்து மிருகங்களும் ஓட்டம் பிடித்தன. அப்போது ஒரு சிறிய பறவை நெருப்பை நோக்கி முன்னேறியது. காட்டின் ராஜாவான சிங்கம் அதிர்ச்சியடைந்து எங்கு செல்கிறாய் என்று கேட்டது, நெருப்பை அணைக்கப் போகிறேன் என்றது அந்தப் பறவை. உனது அலகில் இருக்கும் ஒரு துளி நீரால் நெருப்பை அணைத்து விட முடியுமா? என்று சிங்கம் சிரித்தது. அதற்கு அந்த பறவை, ‘நான் என்னால் முடிந்ததைச் செய்கிறேன்’ என்றது.

இன்று மலாலா போன்ற சிறு வயதினர் எங்கு பார்த்தாலும் எழுச்சி பெற்றுள்ளனர். இவர்கள் வன்முறைக்கு பதிலாக அமைதியை நாடுகின்றனர், தீவிரவாதத்திற்குப் பதிலாக சகிப்புத் தன்மையை நேசிக்கின்றனர். அச்சத்திலிருந்து தைரியத்திற்கு நடைபோட்டுள்ளனர்.

குழந்தைகளின் கனவுகளை மறுப்பது போன்ற மிகப்பெரிய வன்முறைகள் உலகில் இல்லை.

நோபல் கமிட்டி என்னை சொற்பொழிவு ஆற்ற அழைத்தது, மரியாதையுடன் கூறுகிறேன், நான் அதனை நிறைவேற்ற முடியவில்லை. நான் இங்கு மவுனத்தின் சப்தத்தை, களங்கமற்றதன் அழுகையை பிரதிநிதித்துவம் செய்கிறேன். காணமுடியாததன் முகத்தை பிரதிநிதித்துவம் செய்கிறேன்” என்று உணர்ச்சி பொங்க அனைவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்புமாறு பேசினார் கைலாஷ் சத்யார்த்தி.

அம்ஜத் இசை

இவ்விழாவில் ‘அமைதியின் ராகம்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இந்திய இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான், அவரின் மகன்கள் அமான், ஆயான், பாகிஸ்தான் இசைக் கலைஞர் ரஹத் படேஹ் அலி கான், நார்வே இசைக் கலைஞர் எட்வர்ட் கிரெய்க் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அசாம் டீ

நோபல் பரிசளிப்பு விழாவையொட்டி தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. அதில், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் விளையும் டீ, சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் விளையும் கீமுன் டீ கலந்து தயாரிக்கப்பட்ட புதிய சுவையுடன் கூடிய டீ பரிமாறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x