Last Updated : 15 Dec, 2014 02:15 PM

 

Published : 15 Dec 2014 02:15 PM
Last Updated : 15 Dec 2014 02:15 PM

கட்டாய மதமாற்றம்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி

கட்டாய மதமாற்ற விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாள் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

மாநிலங்களவையில் நேற்று கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பேசும்போது, “இந்துத்துவா அமைப்புகள் கட்டாய மதமாற் றத்தில் ஈடுபடுகின்றன. இது, மத ரீதியாக சமூகத்தைப் பிளவுபடுத் தும் முயற்சியாகும். இதனால், நாட்டில் கொந்தளிப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அமைப்பின் முயற்சி வெற்றி பெற நாங்கள் விடமாட்டோம். அவையின் மற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக விவாதிக்க வேண்டும்.

கட்டாய மதமாற்றங்கள் நடை பெற அனுமதிக்கப்படாது என்று பிரதமர் உறுதியளிக்க வேண்டும். அவர் நாடாளுமன்றத்துக்கு வந்து விவாதங்களில் பங்கேற்க வேண்டும்” என்றார்.

அப்போது, நாடாளுமன்ற விவ காரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும் போது, “கட்டாய மதமாற்ற விவ காரம் தொடர்பாக வரும் 17-ம் தேதி தேதி மாநிலங்களவையில் விவாதம் நடத்த நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டுள்ளது. அப் போது, இது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகள் கேள்வி கேட்கலாம்” என்றார்.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “நாட்டின் அரசியல் சாசன சட்டத் தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற தன்மையை சீர்குலைக்கும் வகை யில் கட்டாய மதமாற்றத்தில் ஈடு படும் அமைப்புகளின் செயல்பாடு உள்ளது.

அதோடு, கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறந்திருக்கும் என்றும், நல்லாட்சி நிர்வாக நாள் கடைப்பிடிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது கிறிஸ்தவர்களின் மத உரிமையை பாதிக்கும் செயலாகும். இந்த அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, கிறிஸ்துமஸ் தினத்தின்போது பள்ளிகளைத் திறந்துவைக்குமாறு அறிவுறுத்தப்படவில்லை. ஆன் லைனில் கட்டுரைப் போட்டிதான் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் முக்தர் அப்பாஸ் நக்வி, அருண் ஜேட்லி ஆகியோரின் பதில்களை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் டி.ராஜா ஆகியோரும் மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய அவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், “ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீ ஸுக்கு அவைத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். தற் போது எதிர்க்கட்சிகள் அளித்துள்ள நோட்டீஸுக்கு அவைத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, இப்போது விவாதம் நடத்த முடியாது” என்றார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா பேசும்போது, “எங்கள் கோரிக்கை ஏற்கப்படாத வரை அவையை நடத்தவிடமாட்டோம்” என்றார். அப்போது குறுக்கிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “அவைத் தலைவரை மிரட்டுகிறீர்களா? இதற்கு முன்பு இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றதில்லை” என்றார்.

இதையடுத்து அவை நடவடிக்கை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது. அவை மீண்டும் 3 மணிக்கு தொடங்கிய போதும், நிலைமையில் மாற்றமில்லை. எதிர்க்கட்சியினர் தொடர்ந்து கோஷமிட்டனர். அதையடுத்து அவை நட வடிக்கை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x