Last Updated : 06 Jul, 2019 01:39 PM

 

Published : 06 Jul 2019 01:39 PM
Last Updated : 06 Jul 2019 01:39 PM

சிபிஐ கூடுதல் இயக்குநர் நாகேஸ்வர் ராவ், தீயணைப்பு துறைக்கு இடமாற்றம்

சிபிஐ அமைப்பின் கூடுதல் இயக்குநராக இருந்த எம். நாகேஸ்வர் ராவ், அங்கிருந்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தீயணைப்பு துறை , குடிமைபாதுகாப்பு மற்றும் ஊர்காவல் படை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை பிரதமர் மோடி தலைமையிலான நியமனக்குழு கடந்த நேற்று பிறப்பித்துள்ளது. சிபிஐ இயக்குநராக இருந்த நாகேஸ்வர் ராவ் , தற்போது தேசிய பேரிடர் மீட்புப்படைக்கு ஈடான தீயணைப்புத்துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சிபிஐ இயக்குநராக இருந்த ஆலோக் வர்மா, இணை இயக்குநராக இருந்த அஸ்தானா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர். இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத் 23-ம் தேதி நள்ளிரவு இருவரையும் காத்திருப்பு பட்டியலில் வைத்த மத்திய அரசு கூடுதல் இயக்குநராக நாகேஸ்வர் ராவை நியமித்தது. அவரும் சிபிஐ கூடுதல் இயக்குநராக பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் நாகேஸ்வர் ராவ்  மிகப்பெரிய அளவில் பணியிடமாற்றங்களை பிறப்பித்தார். ஆனால், அந்த உத்தரவுக்கு எதிராக பலஅதிகாரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இடைக்கால சிபிஐ தலைவராக கடந்த ஜனவரி 8-ம் தேதி வரை நாகேஸ்வர் ராவ் இருந்தார்.

அதன்பின் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மீண்டும் சிபிஐ இயக்குநராக நியமிக்க உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அவர் ஜனவரி 10-ம் தேதி சிபிஐ இயக்குநராக பதவி ஏற்றதும் அவரை தீயணைப்பு துறை இயக்குநர் பதவிக்கு தூக்கி அடித்தது மத்திய அரசு.

ஆனால், அந்த பதவிக்கு செல்ல மறுத்த அலோக் வர்மா ராஜினாமா செய்தார். அதன்பின் மீண்டும் சிபிஐ இயக்குநராக பொறுப்பேற்ற நாகேஸ்வர் ராவ், பிப்ரவரி 2-ம் தேதிவரை அந்த பதவியில் இருந்தார். அதன்பின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரிஷி குமார் சுக்லா சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மத்திய்மைச்சர்கள் கொண்ட நியமனக் குழு நாகேஸ்வர் ராவை தீயணைப்பு துறை இயக்குநராக இடமாற்றம் செய்தது.

இதுகுறித்து மத்தியஅரசு பிறப்பித்த உத்தரவில், " 1986-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான எம். நாகேஸ்வர் ராவ், சிபிஐ அமைப்பின் கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தீயணைப்புத்துறை, குடிமைப் பாதுகாப்பு, ஊர்காவல் படையின் இயக்குநரா நியமிக்கப்பட்டுள்ளார். 2020 ஜூலை 31-ம் தேதிவரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை நாகேஸ்வர் ராவ் அந்த பதவியில் நீடிப்பார் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x