Last Updated : 06 Jul, 2019 05:19 PM

 

Published : 06 Jul 2019 05:19 PM
Last Updated : 06 Jul 2019 05:19 PM

காங்கிரஸ் ஆளும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு

காங்கிரஸ் கட்சி ஆளும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை, லிட்டருக்கு சராசரியாக 5 ரூபாய் அதிகரித்துள்ளது.

மத்தியஅரசு 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி மற்றும் சாலை கட்டமைப்பு கூடுதல்வரி(செஸ்) உயர்த்தியது. இதனால், பெட்ரோல், டீசல் இரண்டிலும் லிட்டருக்கு ரூ.2 உயர்ந்தது. இதன் மூலம் மத்தியஅரசு கூடுதலாக ரூ.28 ஆயிரம் கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ்ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக கமல்நாத் இருந்து வருகிறார்.  வரி உயர்வு  குறித்து மத்திய பிரதேச அமைச்சர் ஜிது பட்வாரி கூறுகையில், "  மத்தியப்பிரதேசத்துக்கான நிதிஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததால், இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கு விதித்த வரியோடு சேர்த்து, மாநில அரசும் கூடுதலாக வரி விதித்துள்ளது.

இதன் மூலம் காங்கிரஸ் அரசு ரூ.2,677கோடி திரட்ட முடியும். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று மக்களிடம் வாக்குறுதி அளித்தோம். விரைவில் பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய இருக்கிறோம் பட்ஜெட் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன.

 இந்த நேரத்தில் மாநிலத்துக்கான வருவாய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்ததால், வேறுவழியின்றி வரியை உயர்த்தினோம்.  " எனத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச அரசின் வரி உயர்வால், மாநிலத்தில் சராசரியாக பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.4.50காசுகள் சராசரியாக அதிகரித்துள்ளது. இது நகரங்களுக்கு ஏற்ப மாறுபட்டு, அதிகபட்சமாக ரூ.5.40 அதிகரித்துள்ளது.

மத்தியப்பிரதேச பெட்ரோல் பம்ப் உரிமையாளர்கள் அமைப்பின் தலைவர் அஜய் சிங் கூறுகையில், " மாநில அரசின் முடிவு ஒருபோதும் வருவாயை உயர்த்தாது. கூடுதல் வரியை மாநில அரசு விதித்து இருப்பதால், டீசல் மத்தியப்பிரதேசத்தில் அதிகபட்சமாக லிட்டருக்கு ரூ.1.60 அதிகரிக்கும். மகாராஷ்டிரா, உ.பி மாநிலங்களோடு ஒப்பிடுகையில் லிட்டருக்கு ரூ.5.40 அதிகரிக்கும். போபால் நகரில் நேற்று பெட்ரோல் லிட்டர் ரூ.73.61 பைசா இருந்த நிலையில் இன்று ரூ.78.14 பைசாவாக உயர்ந்துள்ளது. டீசல்விலை நேற்று லிட்டர் ஒன்று ரூ.65.63 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.70.06 காசுகளாக அதிகரித்துள்ளது " எனத் தெரிவித்தார்.

இதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிஆட்சியில் இருக்கிறது. இங்கு முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியதைத் தொடர்ந்து, மாநில அரசு வாட் வரியையும் உயர்த்தியது. பெட்ரோல் மீதான  வாட் வரியை 26 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை 18 லிருந்து 22 சதவீதமாகவும் மாநில அரசுஅதிகரித்தது.

இந்த விலை உயர்வால் ராஜஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.62 அதிகரித்து, ரூ.75.77 ஆக உயர்ந்தது. டீசல் விலை லிட்டர் ரூ. 4.59 காசுகள் உயர்ந்து, ரூ.71.24  பைசாவாக அதிகரித்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x