Last Updated : 04 Jul, 2019 12:00 AM

 

Published : 04 Jul 2019 12:00 AM
Last Updated : 04 Jul 2019 12:00 AM

தனியார் பேருந்து - சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல்; கர்நாடகா சாலை விபத்தில் 12 பேர் பலி: காயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் சிந்தாமணி அருகே சரக்கு வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 13 பேர் கோலார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரை சேர்ந்த 15 பேர் நேற்று சரக்கு வாகனத்தில் முருகமல்லாவில் உள்ள பிரபலமான தர்காவுக்கு சென்றனர். பகல் 12.30 மணியளவில் சிந்தாமணி அருகேயுள்ள பாகலப்பள்ளி சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்த போது, எதிரில் பெங்களூரு நோக்கி வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 12 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த சிந்தாமணி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேருந்து மற்றும் சரக்கு வாகனத்தில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்த நிலையில் தவித்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 13 பேரையும் மீட்ட போலீஸார், கோலார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில் 3 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனிடையே சிந்தாமணி நகர போலீஸார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், தனியார் பேருந்தின் ஓட்டுநர் அதிக வேகமாக வாகனத்தை இயக்கியதால் விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

ஓட்டுநர் தப்பி ஓட்டம்விபத்தை ஏற்படுத்திவிட்டு, தப்பியோடிய ஓட்டுநர் சோமசேகரை போலீஸார் தேடி வருகின்றனர். விரைவில் அவரை கைது செய்து விசாரணை நடத்துவோம் என சிந்தாமணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெகதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த கோர விபத்தின் காரணமாக பெங்களூரு - கோலார் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x