Last Updated : 06 Jul, 2019 04:44 PM

 

Published : 06 Jul 2019 04:44 PM
Last Updated : 06 Jul 2019 04:44 PM

தங்கத்துக்கு வரி உயர்வால் நகை ஆர்டர்கள் வேறுநாட்டுக்கு செல்லும்: நகை ஏற்றுமதியாளர்கள் அச்சம்

தங்கம் இறக்குமதிக்கு வரி விதிப்பால், எங்களுடைய நகை ஆர்டர்கள் உள்ளிட்ட தொழில்கள் அனைத்தும்  வேறுநாட்டுக்கு சென்றுவிடும் என்று  கற்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் நடப்பு பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு சுங்கவரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5சதவீதமாக மத்திய பட்ஜெட்டில் நேற்று மத்திய அரசு உயர்த்தியது.

கடந்த 2018-19-ம் ஆண்டில் தங்கத்தின் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து, 3280 கோடி அமெரிக்க டாலராக சரிந்தது. இந்த வரி உயர்வால் இனிவரும் காலங்களில் தங்கத்தின் இறக்குமதி இன்னும் குறையக்கூடும்.

தங்கத்துக்கு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதற்கு விலைஉயர் கற்கள், மற்றும் தங்கநகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஜிஜேஇபிசி) தலைவர் பிரமோத் அகர்வால் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி ஆகியவற்றுக்கு வரி உயர்வால் நாங்களும், எங்கள் தொழிலைச் சேர்ந்தவர்களும் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறோம். ஏற்கனவே ஏற்றுமதி குறைந்ததால், வேலையிழப்பு, வருமானம் குறைவு என கஷ்டத்துடனே நடத்தி வருகிறோம்.

இப்போது தங்கத்துக்கு இறக்குமதி வரி உயர்வால், இனிமேல் தங்கத்தை கடத்துவது அதிகரிக்கும். எங்கள் தொழிலுக்கு முக்கியமான மூலப் பொருளான தங்கத்துக்கு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய அரசின் இந்த முடிவால், அண்டை நாடுகளில் நகைத் தொழில் நன்கு வளர்ச்சி அடையும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் நம் நாட்டில் இருந்து தங்க நகைகள் வாங்குவதை காலப்போக்கில் நிறுத்திவிடுவார்கள். நம்நாட்டுக்கு வர வேண்டிய ஆர்டர்கள் எல்லாம் அண்டைநாடுகளுக்கு சென்றுவிடும்.

நாங்கள் அண்டை நாடுகளில் சென்று மிகப்பெரிய வைரக் கற்களை பட்டைத் தீட்டும் தொழில் சீனாவுக்கும், வியட்நாமுக்கும் சென்றுவிடும்.  மத்திய அரசு உடனடியாக வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் " எனத் தெரிவித்தார்.

உலக தங்க கவுன்சிலின் இந்திய மேலாண் இயக்குநர் சோமசுதந்திரம் கூறுகையில், " தங்கத்துக்கு இறக்குமதி வரி இந்தியாவின் தங்கநகை தயாரிப்பு சந்தையில் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கும் " எனத் தெரிவித்தார்.

கடந்த 2018-19-ம் ஆண்டில் தங்க நகைகள் மற்றும் கற்கள் ஏற்றுமதி 5.32 சதவீதம் குறைந்து, 3096 கோடி அமெரிக்க டாலர்களாகக் குறைத்துள்ளது. தங்கம் இறக்குமதியும் 3 சதவீதம் குறைந்துள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x