Published : 04 Jul 2019 10:01 AM
Last Updated : 04 Jul 2019 10:01 AM

‘அமெரிக்கா மிரட்டலால் பயம் இல்லை; ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை’ - இந்தியா திட்டவட்ட அறிவிப்பு

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை என மத்திய அரசு தெளிவுபட கூறியுள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது  பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

எனினும், இந்தியாவும் தோழமை நாடுகள் சிலவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈரானிடமிருந்து பெறும் எண்ணெயை வேறு இடங்களிலிருந்து வாங்கிக்கொள்ள ஆறு மாத கால அவகாசத்தை அமெரிக்கா வழங்கியது.

இந்த அவகாசம் மே 2-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஈரானிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் எடுக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த தயார் என இந்தியா அறிவித்தது. ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. அதாவது ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வந்தது.

இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் குறையாமல் தேவையான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்தது. இதையடுத்து அமெரிக்காவை சமரசம் செய்யும் முயற்சியில் இந்தியா இறங்கியது. அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோவிடம் இதுபற்றி பேசப்பட்டது. எனினும் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.

அதேசமயம் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்  ஏற்றுமதி செய்வதை தொடர ஈரானும் விரும்புகிறது. இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி சேகேனி இதனை நேற்று உறுதிப்படுத்தினார். அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போவதில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்ததாவது:

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் உட்பட வர்த்தக பரிவர்த்தைனையை நிறுத்தும் எந்த திட்டமும் இல்லை. அமெரிக்க தடை விதித்துள்ளதால் ஈரானுடனான வர்த்தக தொடர்பை இந்தியா துண்டித்துக் கொள்ளாது.

ஈரானுடன் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கப்படும். அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக இந்தியா சமரசம் செய்து கொள்ளவில்லை. ஜி 20 மாநாட்டில் நடந்த பேச்சுவார்த்தைக்கும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மூன்றாவது நாட்டிற்காக இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x