Published : 14 Aug 2017 10:03 AM
Last Updated : 14 Aug 2017 10:03 AM

அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும்: ஷியா பிரிவு முஸ்லிம் மதகுரு கருத்து

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக வந்தாலும் அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தை இந்துக்களுக்கு முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும் என்று முஸ்லிம் மதகுரு மவுலானா கல்பே சாதிக் கூறியுள்ளார்.

உலக அமைதி மற்றும் நல்லிணக்க மாநாடு மும்பையில் நேற்று நடந்தது. இதில் ஷியா பிரிவு முஸ்லிம் மதகுரு மவுலானா கல்பே சாதிக் கலந்து கொண்டு பேசியதாவது:

பாபர் மசூதி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மீது நாங்கள் முழு நம்பிக்கை வைத்திருக்கிறோம். அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்துக்கு உரிமை கோருவதை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். பாபர் மசூதி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இல்லாமல் இருந்தால் அவர்கள் அதை அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக இருந்தாலும் பிரச்சினைக்குரிய நிலத்தை இந்துக்களிடம் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் அளிக்க வேண்டும். இரு சமுதாயங்களும் இந்த பிரச்சினையை பரஸ்பர மரியாதையுடன் சுமூகமாகத் தீர்க்க வேண்டும். மற்றவர்களுக்குப் பிடித்தமானதை, நெருக்கமானதை நாம் ஒன்று கொடுத்தால் அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நமக்கு பதிலுக்கு ஆயிரமாகத் தருவார்கள். இவ்வாறு கல்பே சாதிக் பேசினார்.

கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் ஷியா வக்பு வாரியம் தாக்கல் செய்த மனுவில், ‘கோயிலும் மசூதியும் அருகில் இருந்தால் வழிபாட்டு ஒலிப்பெருக்கிகள் மூலம் ஏற்படும் சத்தத்தால் இருதரப்பும் கோபமடைந்து பதற்றம் ஏற்படும். எனவே, பிரச்சினைக்குரிய நிலத்துக்கு வெளியே நியாயமான தூரத்தில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள இடத்தில் மசூதி கட்டிக் கொள்கிறோம்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x