

புதுடெல்லி: பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளைச் சேர்ந்த 23 பேரை மத்திய அரசு நேற்று முன்தினம் தீவிரவாதிகளாக அறிவி்த்தது.
அவர்களில் லஷ்கர் நிறுவனர் ஹஃபீஸ் சயீதின் நெருங்கிய கூட்டாளிகள் ரானா இப்திகார், அப்துல் ரவூஃப், ஹஃபீஸ் காலித் வலீத் ஆகிய மூவரும் அடங்குவர். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (யுஏபிஏ), மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்ப்பு, ஊடுருவல், ட்ரோன்கள் மூலம் ஆயுத விநியோகம் மற்றும் தாக்குதல்களுக்குத் திட்டமிடுதல் போன்ற சதி திட்டங்களில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்தத்தின்படி, தீவிரவாத அமைப்புகள் மட்டுமன்றி தனி நபர்களையும் தீவிரவாதிகளாக அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதன் மூலம், சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளின் நிதி ஆதாரங்களை முடக்கவும், சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் என்ஐஏ நடவடிக்கை எடுக்க முடியும்.