

புதுடெல்லி: போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 2 நாள் சிறப்பு மாநாடு குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதன்படி வரும் செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், எரிசக்தி அமைச்சர்கள், விண்வெளித் துறைகளின் தலைவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் பங்கேற்ற பல்வேறு சிறப்பு மாநாடுகள் நடைபெற்று உள்ளன. இதன்தொடர்ச்சியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைவர்கள் பங்கேற்கும் 2 நாள் சிறப்பு மாநாடு அசாமின் குவாஹாட்டியில் இன்று தொடங்குகிறது.
இந்த மாநாட்டில் போதைப் பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட உள்ளன. சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தலுக்கு கிரிப்டோகரன்ஸியில் பணப் பரிவர்த்தனை நடைபெறுகிறது. இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுப்பது குறித்து மாநாட்டில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட உள்ளன.
டார்க் நெட் இணையதளங்கள் வாயிலாக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் பரிமாறப் படுகின்றன. இந்த டார்க் நெட் இணைய தளங்களை கண்டறிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மருந்து உற்பத்தி துறையில் போதைக்காக பல்வேறு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
அவை தொடர்பான தகவல்களை உறுப்பு நாடுகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் கும்பல்களின் சர்வதேச விநியோக சங்கிலியை உடைத்தெறிய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து குவாஹாட்டி மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.