Published : 29 Jul 2017 09:25 PM
Last Updated : 29 Jul 2017 09:25 PM

விவசாயிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சட்டம் இயற்றுக: மாநிலங்களவையில் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டி விவாதிக்க, அவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங்களைவையில் ஆர். எஸ்.பாரதி ஆற்றிய உரை வருமாறு:-

''இந்தியாவில் உள்ள விவசாயிகளின் அவல நிலையை இந்த அவையின் கவனத்திற்கும் அரசாங்கத்தின் கவனத்திற்கும் கொண்டுவர விரும்புகிறேன்.

பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் தங்களுக்கு சிறிதளவு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கோரியும், வாதிட்டும், விண்ணப்பித்தும் வருகின்றனர். இதில் என்னுடன் எந்த உறுப்பினரும் முரண்படமாட்டார் என்று நம்புகிறேன்.

நமது வரலாற்றில் சுதந்திரத்திற்கு பின்னர் இப்போது இந்தியா மிக மோசமான வறட்சியைச் சந்தித்து வருகிறது. இவை அசாதாரணமான சூழ்நிலைகள். எனவே, இந்த அவை சில அசாதாரணமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்த அவையிடம் விண்ணப்பிக்கிறேன்.

தமிழ் நாட்டிலிருந்து வந்த விவசாயிகள் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதம் இங்கே போராட்டம் நடத்தினர். அவர்கள் மறுபடியும் ஜந்தர் மந்தரில் இப்போது கூடியுள்ளனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வேண்டும் என்று விரும்பு கின்றனர்.

எல்லோருக்கும் தெரியும் இந்த விவசாயிகள் மழைக் காலத்தில் போராட்டம் நடத்தினார்கள். குளிர்ச்சியான நேரத்தில் அவர்கள் போராடினார்கள். அவர்கள் தெருக்களில் போராடினார்கள். பின்னர் அனல் பறக்கும் கோடையில் போராடினார்கள். அவர்கள் அதே காரணங்களுக்காக சாலைகளில் போராடினார்கள். இன்று அவர்கள் மழையில் நனைந்திருக்கிறார்கள். இந்த அவையின் பல தலைவர்கள் அவர்களைச் சந்தித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினோம்.

எங்கள் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார். தமிழக முதல்வரும் அவர்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்தார். இவை எல்லாவற்றுக்கும் அப்பால், அவர்களைச் சந்திப்பதற்கு பிரதமர் ஏன் மறுத்து வருகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய கட்சியின் சார்பில் நான் பிரதமருக்கு உங்கள் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன். குறைந்தபட்சம் இப்போதாவது அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு தேவையானவற்றைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் இது அவர்களுடைய நல்லெண்ணத்தோடு கூடிய நேர்மையான கோரிக்கை.

தமிழ்நாட்டில் மழை பொய்த்து விட்டது. வங்கிகள் அவர்களுக்கு உதவி மறுத்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள வங்கிகள் எல்லாம் விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்வதற்கான காரணம் அவர்கள் குற்றவாளிகளைப் (கிரிமினல்கள்) போல் நடத்தப்படுவதுதான். வங்கி அதிகாரிகள் குண்டர்களின் உதவியோடு விவசாயிகளின் வீட்டுக் கதவுகளை நள்ளிரவில்கூட தட்டுகிறார்கள். இதில் விவசாயிகளுடைய கவுரவம் சம்பந்தப்பட்டிருக்கிறது.

கோடிக்கணக்கான ரூபாயை வங்கிக்கு செலுத்த மறுத்துவிட்ட ஒரு நபர் வெளி நாட்டுக்குப் பறந்து சென்று மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் சில லட்சங்கள் மட்டுமே கடன் வாங்கிய ஏழை விவசாயிகள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள். இதுதான் அவர்களுடைய தற்கொலைக்கு காரணம். அவர்கள் மாநில அரசை அணுகினார்கள். மாநில அரசோ, மத்திய அரசு தான் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவிட்டது.

தமிழ்நாட்டில் 2006 ஆம் ஆண்டில் எங்கள் தலைவர் கருணாநிதி முதல்வராகப் பதவியேற்ற போது, முதல் நாளிலேயே முதல் சொட்டு மையிலேயே, அவர்கள் பெரிய விவசாயிகளா, சிறிய விவசாயிகளா என்று பேதம் பார்க்காமல் 7,000 கோடி வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான உத்தரவில் கையெழுத்து போட்டார். இன்று உத்தரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒரே தேசம், ஒரே வரி, ஒரே கல்வி என்பதை நம்புவதாக பாஜக அர சாங்கம் பேசிக் கொண்டி ருக்கிறது. இந்த அரசு ஒரே நாடு, ஒரே நீட், ஒரே வரி மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு என்று நம்பும் போது, ஏன் விவசாயிகளுக்கு ஒரே கடன் ரத்தை வழங்கக் கூடாது?

திமுக ஆட்சியில் இருந்த போது, எங்கள் தலைவர் கருணாநிதி தமிழ்நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக பல சட்டங்களை இயற்றினார். 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நியாயமான கூலிச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் மூலம் சாகுபடிக் காலத்தில் அனைத்து விவசாயப் பணிகளுக்காக அனைத்து வகையான விவசாயப் பணிகளுக்கும் ஒரே மாதிரியான விதத்தில் கூலி வழங்கியதை அரசு கடைபிடித்தது.

இங்கே நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். 2006ஆம் ஆண்டில் உழவர் சந்தை அதாவது விவசாயிகளின் சந்தை எனப்படும் ஒரு திட்டம் இருந்தது. விவசாயிகளால் விளைவிக்கப்படுபவை நேரடியாக இங்கே கொண்டு வரப்படுகிறது. அங்கே இடைத்தரகர்கள் எவருமில்லை. பல உறுப்பினர்கள் இங்கே சுட்டிக் காட்டினார்கள். விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம் அவர்களுக்கு நேரடியாகப் போய்ச் சேருவதில்லை. ஆனால் இடைத்தரகர்கள் அந்த லாபங்களைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள் என்று கூறினார்கள்.

இந்த நடை முறைகளை ஒழிப்பதற்கு தமிழ்நாட்டில் நாங்கள் ஒரு சட்டம் இயற்றினோம். தமிழ் நாடு முழுவதும் விவசாயிகளுக்கான மையங்களைத் திறப்பதற்கானச் சட்டம் அது. இதன் மூலம் 2006 முதல் 2011 வரை விவசாயிகள் பலன டைந்தனர்.

அதேபோன்று நாங்கள் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டத்தை, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும், நேரடியாக விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் விரிவான சமூகப் பாதுகாப்பை அளிப்பதற்கும் அவர்களுடைய நலனை உறுதி செய்வதற்கும் நிறை வேற்றினோம்.

இப்போது, இன்று நாடு முழுவதும் நமது விவசாயிகள் சந்தித்து வரும் அடிப்படையான சவால்களில் மூன்றை மட்டுமே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது சவால், தொடர்ந்து சாகுபடி செய்து வருவதாலும், கட்டுப்பாடின்றி ரசாயனங்களையும், உரங்களையும் பயன்படுத்தி வருவதாலும் நிலத்தின் வளம் மோசமடைந்துள்ளது. இரண்டாவது, நமது விவசாயம் பருவ காலங்களையும் குறைவான நீர் வளத்தையும் நம்பி செய்ய வேண்டியுள்ளது. மூன்றாவது, கடுமையான விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறை.

எனவே, விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறித்து விவாதிப்பதற்காகவும், இந்தச் சவால்களைப் போக்குவதற்கான சட்டம் ஒன்றை இயற்றுவதற்காகவும், சிறப்புக் கூட்டத் தொடர் ஒன்றை நடத்த வேண்டும் என்று நான் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடைய நண்பர்களில் பலர், மாறி மாறி வரும் அரசாங்கங்கள் விவசாயம் தொடர்பான பிரச்சினைகளை வாதிக்கிறார்களே தவிர, அதில் எதுவும் விவசாயியைச் சென்று சேர்வதில்லை என்று கூறினார்கள்.

எனவே, குறைந்த பட்சம் இப்போதாவது விவசாயிகளின் நிலை குறித்து தீவிரமாகக் கவனித்து, ஒரு சிறப்பு விவாதத்திற்கு ஏற்பாடு செய்து, விவசாயிகள் சந்திக்கும் சவால்களைப் போக்கு வதற்கு சிறப்பு சட்டமுன் வடிவு ஒன்றை இயற்றுவோம்.

தமிழ்நாட்டில் இன்று விவசாயிகள் சந்தித்து வரும் முக்கியமான இரண்டு பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஒன்று, நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே நாசமாகி விடும். விவசாயிகள் அங்கு எதையும் சாகுபடி செய்ய முடியாது. அவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசால் நடத்தப்படும் இந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று வல்லுநர்களும் கருத்துக் கூறியுள்ளனர்.

அதே போன்று கடந்த 2 வாரங்களாக, கதிராமங்கலம் விவசாயிகள் ஓ.என்.ஜி.சி.யை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அவர்கள் மறுபடியும் சொல்கிறார்கள். நாங்கள் காரைக்காலில் திட்டத்தைத் தொடங்கப் போகிறோம் என்று கூறுகிறார்கள்.

ஒரு காலத்தில் மாநிலம் முழுவதற்கும் அரிசி உற்பத்தி செய்யும் இடமாக தஞ்சாவூர் திகழ்ந்தது. சோழ நாடு சோறு அளித்த நாடு என்று சொல்வது வழக்கம். தமிழ்நாடு முழுவதுமே தஞ்சாவூர் மாவட்டத்தின் நெல் உற்பத்தியையே சார்ந்திருந்தது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டமே அழிந்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். இந்தப் பிரச்சினையில் அரசு தீவிரக் கவனம் செலுத்த வேண்டும்.

நான் சுற்றுச் சூழல் துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். எங்கள் தலைவர் மரபணு மாற்ற கடுகு பிரச்சினைக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தப் பிரச்சினையும் பரிசீலிக்கப்பட வேண்டும்'' என்றார் ஆர்.எஸ்.பாரதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x