Published : 12 Jul 2017 09:36 AM
Last Updated : 12 Jul 2017 09:36 AM

நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: சொலிசிட்டர் ஜெனரல் கருத்து கூற அவகாசம்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு ஆதரவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக்கோரி முன் னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனர லின் கருத்தை தெரிவிக்க உச்ச நீதிமன் றம் இருவாரம் அவகாசம் வழங்கியது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு கோரியது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றதாக சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி ஏற்கெனவே மு.க.ஸ்டாலின், வழக்கறிஞர் கே.பாலு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சரும், ஆவடி எம்எல்ஏ-மான மாஃபா பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில், ‘‘இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்ற எம்எல்ஏ-க்கள் யாரும் தங்களது சுய விருப்பத்தோடு வாக்களிக்கவில்லை. ஒருவித அழுத்தத்தோடு தான் வாக்களித்தனர். எனவே இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே கடந்த ஜூலை 5-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் தரப்புக்கு சட்ட ஆலோசனைகள் வழங்கியுள்ளதால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை ஏற்று, நீதிபதிகள் இந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பேரவைத் தலைவர் எடுத்த முடிவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கில் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக ஏற்கெனவே உத்தரவிட்டோம் என கருத்து தெரிவித்தனர். அப்போது ஆஜராகிய சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித்குமார், இந்த வழக்கில் தனது எழுத்துப்பூர்வமான கருத்தைத் தெரிவிக்க இரு வாரம் அவகாசம் கோரினார். இதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞரான கோபால் சுப்ரமணியம் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கில் தனது கருத்தை தெரிவிக்க சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதேபோல் இந்த மனுவின் நகலை தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கும் வழங்க மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x