Last Updated : 20 Jul, 2017 11:08 AM

 

Published : 20 Jul 2017 11:08 AM
Last Updated : 20 Jul 2017 11:08 AM

மாநிலங்களவையில் கதிராமங்கலம் பிரச்சினை: ஒஎன்ஜிசி மீது திருச்சி சிவா புகார்

கதிராமங்கலம் பிரச்சனையை நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் புதன்கிழமை திருச்சி சிவா எழுப்பினார். அதில் அவர், மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அனுமதி பெறாமல் இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஒஎன்ஜிசி) அங்கு எண்ணெய் எடுப்பதாகப் புகார் தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் திமுகவின் மூத்த உறுப்பினர் சிவா பேசியதாவது: கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்க மாசுக்கட்டுபாடு வாரியத்தின் அனுமதியை ஒஎன்ஜிசி பெறவில்லை.

இதனால், அங்கு எடுக்கப்பட்டு வரும் எண்ணெய் கசிந்து வயல்வெளியில் பரவி பயிர்கள் நாசம் நடைந்துள்ளன. இது குடிநீரிலும் கலந்ததால் அதை குடித்த குழந்தைகள் உடல் நலம் குன்றியது அவர்களின் மருத்துவ சோதனையிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனையில் அம்மாவட்ட ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திடீர் என ஒருநாள் நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தீக்கு காரணமாக பொதுமக்கள் மற்றும் போலீஸார் தங்களுக்கு இடையே புகார் கூறி வருகின்றனர். தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இந்த பிரச்சனையால் வேலைநிறுத்தமும் தொடர்ந்து வருகிறது.

இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அப்பணிகளை அங்குள்ள மக்கள் ஏற்கும் வரை நிறுத்தி வைக்கும்படி ஒஎன்ஜிசிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்த பிரச்சனையில் கதிராமங்கலத்தில் போலீஸார் செய்த 10 பேர் கைதினையும் குறிப்பிட்ட சிவா, அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

இங்கு நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர் வளர்மதி குண்டர் சட்டத்தில் கைதானதாகவும் எடுத்துக் கூறிய சிவா, கதிராமங்கலத்தின் சூழல் மோசமாகி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x