Published : 25 Jan 2014 10:08 AM
Last Updated : 25 Jan 2014 10:08 AM

பெண்கள் முன்னேறாவிட்டால் இந்தியா வல்லரசாக முடியாது- ராகுல் காந்தி பேச்சு

பெண்கள், இளைஞர்கள் முன்னேறாவிட்டால் இந்தியா வல்லரசாக முடியாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தயாரிப்பது தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை ராகுல் காந்தி கேட்டறிந்து வருகிறார்.

அதன்படி மகாராஷ்டிர மாநிலம் சேவாகிராமத்தில் உள்ள காந்தி ஆசிரமத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை அவர் கலந்துரையாடினார். ராஜஸ்தான், கேரளம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் இதில் பங்கேற்றனர்.

அப்போது ராகுல் பேசியதாவது:

இந்தியாவில் 50 சதவீதம் பேர் பெண்கள். அவர்கள் முன்னேறாவிட்டால் நாட்டில் எல்லாமே பாதிதான். அந்த வகையில் பாதி வலிமை, பாதி பெருமை, பாதி சக்திதான் கிடைக்கும். இந்தியா வல்லரசாக முடியாது.

இதேபோல் கோடிக்கணக்கான நமது இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டும். அவர்கள் முன்னேறவில்லை என்றாலும் இந்தியா வல்லரசாக முடியாது.

மேலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

வேட்பாளர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்

இப்போதைய நடைமுறைகளின்படி காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கின்றன. அங்குதான் ஊழலின் ஆணிவேர் ஆரம்பமாகிறது.

இதற்குப் பதிலாக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மக்களே நேரடியாகப் பங்கேற்றால் 50 சதவீத ஊழல் ஒழிந்துவிடும்.

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம்

உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. வரும் மக்களவைத் தேர்தலுக்காக வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது காங்கிரஸ் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.

முதல்முறையாக காங்கிரஸ் வேட்பாளர்களில் 15 சதவீதம் பேர் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனையின்பேரில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார் ராகுல் காந்தி.

கூட்டத்தில் பேசிய கேரள பெண் ஒருவர், தேசிய ஊரக தொழில்நுட்ப திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் மானிய விலையில் இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்ட வேட்பாளர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும், அப்போதுதான் அவர்களால் மக்களுக்குப் பணியாற்ற முடியும் என்று ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஆலோசனை தெரிவித்தார்.

இதேபோல் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துப் பிரதிநிதிகளும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x