Last Updated : 04 Jun, 2016 02:40 PM

 

Published : 04 Jun 2016 02:40 PM
Last Updated : 04 Jun 2016 02:40 PM

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது: ஹேமமாலினி

உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக மதுரா எம்.பி. ஹேமமாலினி விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதலில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரா தொகுதி பாஜக எம்.பி. ஹேமமாலினி, தன்னுடைய படப்பிடிப்பு படங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். இது ஹேமமாலினியின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக சர்ச்சை எழுந்தவுடன், படங்களை நீக்கினார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக மதுரா எம்.பி. ஹேமாமாலினி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுராவில் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "சம்பவம் நடந்தபோது நான் படப்பிடிப்பில் இருந்தேன். சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் எனது படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு மதுரா வந்தடைந்தேன். 10 நாட்களாக மதுராவில் இருந்துவிட்டு நான் கிளம்பிய மறுநாளே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

மதுரா சம்பவத்துக்குப் பின்னராவது உ.பி. அரசு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க கடமைப்பட்டுள்ளது. நடந்த சம்பவத்திற்கு ஆட்சியில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் மெத்தனமே காரணம். அவர்களை விட்டுவிட்டு மதுரா பிரச்சினையில் என்னை ஏன் இழுக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. ஒரு எம்.பி.யாக மதுரா நகர மேம்பாட்டுக்கு நான் என்னென்ன செய்து வருகிறேன் என்பதை உங்களிடம் சொல்லத் தேவையில்லை. மதுரா நகர மக்களுக்கே அது தெரியும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x