Published : 22 Sep 2016 08:24 AM
Last Updated : 22 Sep 2016 08:24 AM

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது: முன்னாள் பிரதமர் தேவகவுடா போர்க்கொடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் உச்ச நீதிமன்ற உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்கக் கூடாது என முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள (மஜத) தலைவருமான தேவகவுடா போர்க்கொடி தூக்கியுள்ளார்.

காவிரி விவகாரம் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று மாலை முன்னாள் பிரதமர் தேவகவுடாவை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, காவிரி நதி நீர் பங்கீடு, காவிரி மேலாண்மை வாரியம், கர்நாடக அரசுக்கு எதிரான பாஜகவின் போர்க்கொடி, ராஜினாமா செய்வது ஆகியவை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதையடுத்து தேவகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி விவகாரத்தில் பாஜக அரசியல் செய்ய கூடாது. கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கன்னட மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும். தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறக்கக் கோரும் உச்ச நீதிமன்ற உத்தரவு பாரபட்சமானது.

கர்நாடகாவில் குடிக்கவே நீர் இல்லாத போது, தமிழகத்தில் சம்பா பயிர் பாசனத்துக்கு எப்படி நீரைத் திறக்க முடியும். மனிதர்களின் உயிரைவிட பயிர்கள் முக்கியமா? எதன் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது?

எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்குக் காவிரி நீரைத் திறந்துவிட முடியாது. அதே நேரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக் கூடாது. அடுத்தகட்டமாக சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எடுக்க வேண்டிய முடிவை உறுதியாக அறிவிக்க‌ வேண்டும்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பிரதமர் நரேந்திர மோடி ஏற்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முழுமையாக நிராகரிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பையும் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்தில் நான் இதுவரை மூன்றுமுறை எனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறேன். இப்போது நினைத்தால் கூட, எனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்வேன். ஆனால் கர்நாடகாவின் உரிமைக்காக யார் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்? அதேநேரம் கர்நாட காவின் நலனுக்காக மஜதவை சேர்ந்த அனைத்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனை வரும் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x