Published : 13 Aug 2014 01:31 PM
Last Updated : 13 Aug 2014 01:31 PM

கட்சிக்குப் புத்துயிரூட்ட காங்கிரஸ் போராடும்: சோனியா காந்தி

தற்போது சவாலான காலகட்டத்தில் இருப்பதால், கட்சியைப் புத்துயிரூட்ட காங்கிரஸ் போராடும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "காங்கிரஸ் புத்துயிர் பெறுவதற்கு முழுபலத்தையும் கொண்டு கட்சி போராடும். இது நமக்கு மிகவும் சவாலான காலம். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

பாஜக அரசு தலைமையில் நாட்டில் வகுப்புவாத கலவரங்கள் அதிகரித்துள்ளன. இதனை எதிர்த்து அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராடும். இதற்காக காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக போராட வேண்டும். பாஜகவின் பிரிவினைவாத அரசியல் மற்றும் சர்வாதிகார அரசியலை எதிர்த்து நாம் போராட வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி தமது ஆட்சியையும் குறைந்தபட்ச கொள்கைகளோடுதான் நடத்துகிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளை மட்டுமே முன்னெடுத்து செல்கிறது. இந்த அரசு புதியத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை" என்றார் சோனியா காந்தி.

இதனிடையே, நாட்டில் நடக்கும் வகுப்புவாத மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க, காங்கிரஸ் தயாராக உள்ளதாக, காங்கிரஸ் கட்சித் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக பாஜக ஆட்சியில் வகுப்புவாத மோதல்கள் அதிகரித்துள்ளதாக சோனியா காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x