Last Updated : 09 Feb, 2017 09:09 PM

 

Published : 09 Feb 2017 09:09 PM
Last Updated : 09 Feb 2017 09:09 PM

விமானங்களில் பிராந்திய மொழி பத்திரிகைகள் விநியோகிக்க கோரிக்கை: பரிசீலிப்பதாக அமைச்சர் கஜபதி உறுதி

விமானங்களில் தமிழ் உட்பட பிராந்திய மற்றும் மாநில மொழி பத்திரிகைகள் விநியோகிக்க மக்களவையில் இன்று கோரிக்கை எழுப்பப்பட்டது. அதிமுக உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் கோரிக்கையை பரிசீலிப்பதாக மத்திய விமானப் போக்குவரத்துதுறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ உறுதி அளித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் விமான ஓட்டிகள் மீதான கேள்வி பர்த்ருஹரி மஹதாப் எனும் உறுப்பினரால் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் கஜபதியிடம் அதிமுக உறுப்பினர் ராமச்சந்திரன் ஒரு துணைக்கேள்வி எழுப்பினார். அதில், விமானங்களில் பயணிகளுக்கு ஆங்கில நாளேடுகள் மற்றும் பத்திரிகைகள் மட்டும் விநியோகிக்கப்படுவதாகவும், இவை பிராந்திய மொழிகளிலும் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார். தமிழக விமானங்களில் தமிழ், ஆந்திராவில் தெலுங்கு, கர்நாடகாவில் கர்நாடகம் மற்றும் கேரளாவில் மலையாளம் ஆகிய மொழிகளில் பத்திரிகைகள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கஜபதி, ‘தற்போது பத்திரிகைகள் விமானங்களில் விநியோகிக்க எந்த முறை அமல்படுத்தப்படுகிறது எனத் தெரியவில்லை. இதில் மாநில மற்றும் பிராந்திய மொழிகள் இல்லை எனில், அதன் நாளேடுகள் மற்றும் பத்திரிகைகள் விநியோகிக்க ஆவண செய்கிறேன்.’ என உறுதி அளித்தார்.

தற்போது, சென்னையில் இருந்து விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு விமானநிலையங்களில் மட்டும் ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளேடுகள் வழங்கப்படுகின்றன. விமானங்களில் ஏறிய பின் ஆங்கில நாளேடுகள் மட்டுமே அளிக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x