Published : 07 Feb 2014 07:15 PM
Last Updated : 07 Feb 2014 07:15 PM

தெலங்கானா மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு வகை செய்யும் சர்ச்சைக்குரிய தெலங்கானா மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 12-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளும் வெளியிலுமாக பலத்த எதிர்ப்பு இருந்தபோதிலும் அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் இதே வடிவில் தாக்கல் செய்யப்படும். விவாதத்துக்கு வரும்போது 32 திருத்தங்களை அரசு முன்வைக்கும்.

மசோதாவில் ஹைதராபாத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்கவில்லை. இந்த கோரிக்கை பரவலாக எழுப்பப்பட்டு வந்தது. எனினும், ராயலசீமா மற்றும் வட கடலோர ஆந்திரப் பகுதி மக்களின் குறைகளை களைய இந்த பகுதிகளுக்கு சிறப்பு திட்டத்தை அரசு அறிவிக்கும்.

ஆந்திரப் பிரதேச மறுஅமைப்பு மசோதா என்ற பெயரிலான இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தருவதற்கு முன்னர் விரிவான அளவில் ஆலோசனை நடந்தது. முன்னதாக, கட்சித்தலைவர் சோனியாகாந்தி தலைமையில் காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூடி விவாதித்தது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலரும் ஆந்திரப்பிரதேச பொறுப்பாளருமான திக்விஜய் சிங் பங்கேற்றார்.

ஆளுநருக்கு சட்டம், ஒழுங்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டதா என்று அமைச்சரவைக் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் வேளாண்துறை அமைச்சருமான சரத் பவார் கேள்வி எழுப்பினார்.

இந்த மசோதாவுக்கு அவர் சம்மதம் தெரிவித்தாலும், புதிய தலைநகர் சீமாந்திராவுக்காக என்ன செய்யப்படுகிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக அவர் கேட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. எல்லா செலவையும் மத்திய அரசே ஏற்கும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் பிரிக்கப்படுவதற்கு மத்திய அமைச்சர் பல்லம் ராஜுவும் அவரது சகாக்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஹைதராபாத்துக்கு யூனியன் பிரதேச அந்தஸ்து தரப்பட வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் ஈடேறவில்லை.

மசோதா தாக்கலுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

இதனிடையே, தெலங்கானா மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

இப்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று அது மேலும் தெரிவித்திருக்கிறது.

‘ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து புதிதாக தெலங்கானா மாநிலம் அமைப்பதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என நீதிபதிகள் எச்.எல்.தத்து, எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது.

‘மாநிலத்தை பிரிப்பதை ஆட்சேபித்து தாக்கலாகும் எந்த மனுவையும் ஏற்க, இப்போதைக்கு சரியான காலம் இல்லை என்பதால் பரிசீலனைக்கு ஏற்கமாட்டோம்’, என 2013ம் ஆண்டு நவம்பர் 18ல் பிறப்பித்த உத்தரவை அமர்வு சுட்டிக்காட்டியது.

‘இப்போதைக்கும் நவம்பர் 16, 2013-க்கும் இடைப்பட்ட கால நிலைமையில் மாற்றமில்லை. எனவே இந்த நிலையில் தலையிட விரும்பவில்லை. எனினும் ரிட் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை சரியான தருணத்தில் பரிசீலிப்போம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின்போது மனுதாரர்கள் அனைவரின் கருத்துகளையும் சுமார் ஒன்றரை மணி நேர வரை கேட்டு மேற்சொன்ன உத்தரவை நீதிபதிகள் அமர்வு பிறப்பித்தது.

‘பிப்ரவரி 10-ம் தேதி நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா தாக்கல் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அது சட்டமாகிவிட்டால் மீண்டும் மாற்ற முடியாது. எனவே இந்த மசோதா தாக்கலுக்கு தடைவிதிக்க வேண்டும்’ என்பது தெலங்கானா உருவாவதற்கு எதிர்ப்பு தெரிவிப்போரின் கோரிக்கை.

‘தெலங்கானா சட்ட முன்வடிவை ஆந்திர சட்டப்பேரவை ஒரு மனதாக நிராகரித்து விட்டதால் அதே வடிவில் அதை தாக்கல் செய்ய அனுமதிக்கக் கூடாது’ என்பதும் தெலங்கானா எதிர்ப்பாளர்களின் கருத்தாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x