Last Updated : 20 Jun, 2017 02:18 PM

 

Published : 20 Jun 2017 02:18 PM
Last Updated : 20 Jun 2017 02:18 PM

ஜிஎஸ்டி-யை ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் அறிமுகம் செய்கிறார்

சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜிஎஸ்டி- வரிக்கு நாடு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மாறுகிறது. ஜூன்30-ம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இதனை அறிமுகம் செய்கிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இதனை பிரணாப் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு அறிமுகம் செய்யவிருப்பதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

இந்த வரித்திட்டத்துக்கு மாறுவதனால் ஏற்படும் குறுகிய காலச் சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

“வரி ஏய்ப்பை அகற்றும் ஒரு திறன் வாய்ந்த ஒரு வரித்திட்டம் அமலாகிறது, இதனால் வருவாய் அதிகரிக்கும், மத்திய மாநில அரசுகளின் செலவீட்டுத் திறன் அதிகரிக்கும், இதன் காரணமாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் உடன்பாடான ஒரு தாக்கம் ஏற்படும்.

கேரளா, ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்களும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றியுள்ளன. கேரளா இந்த வாரத்தில் பரிசீலிக்கும் என்று தெரிகிறது. ஜம்மு காஷ்மீரும் இதற்கான நடைமுறையில் இருந்து வருகிறது” என்றார்.
நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்கள், மாநில முதல்வர்கள், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்கள், இந்த மசோதாவுக்காக உதவி செய்த அரசு அதிகாரிகள், கமிட்டி சேர்மன்கள் ஆகிய அனைவரும் அறிமுக நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரும் இருப்பார்கள். முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி. தேவகவுடா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினத்தில் மோடி, பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜிஎஸ்டி பற்றி பேசும் 1 மணி நேர நிகழ்ச்சியும் உள்ளது. அதன் பிறகு ஜிஎஸ்டி குறித்த 2 குறும்படம் திரையிடப்படுகிறது.

‘சிக்கல் நிறைந்த நடைமுறை அல்ல’

ஜிஎஸ்டி-க்கு தயாராகுமாறு தொழிற்துறையினரை வலியுறுத்திய அருண் ஜேட்லி இது சிக்கல் நிறைந்த நடைமுறையில்லை என்று உறுதி அளித்தார்.

“மாதாந்திர கணக்குகளைச் சமர்பிக்க ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது தொழிற்துறையினர், வணிகர்கள் இதற்காகத் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி-காக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை நன்றாக நடைபெற்று வருகிறது. தொலை நோக்குப் பார்வையின் படி வரி ஏய்ப்பை நிச்சயம் ஜிஎஸ்டி தடுக்கும். வரி கட்டுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

அனைத்து வரிவிதிப்புகளுக்குமான சுமார் 80 லட்சம் வரிசெலுத்துனர்களில் 65 லட்சம் பேர்கள் கடந்த வாரத்தில் பதிவு செய்துள்ளனர். சிலர் வாட் வரி மற்றும் சுங்கவரிக்கும் பதிவு செய்துள்ளனர், இது நீக்கப்பட்டு விடும்.

கடந்த 6 மாதங்களாக ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாகும் என்று கூறிவந்துள்ளோம் எனவே இன்னும் தயாராகவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் கணக்கு விவரங்கள் தாக்கல் செய்யும் போது இந்த புதிய ஜிஎஸ்டி அமலுக்கு தொழிற்துறையினர் தயாராக இருந்துள்ளனரா இல்லையா என்பது தெரிந்து விடும். இதையும் கூட செப்டம்பர் 15 வரை நீட்டித்திருக்கிறோம். எனவே தயார் ஆவதற்கு இரண்டரை மாதங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குள்ளும் ஒருவர் தயாராகவில்லையெனில், அவருக்குத் தயாராக விருப்பமில்லை என்றே நான் அறுதியிட வேண்டி வரும்” என்றார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x