Last Updated : 28 Oct, 2015 12:58 PM

 

Published : 28 Oct 2015 12:58 PM
Last Updated : 28 Oct 2015 12:58 PM

நான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது: மார்க் ஸக்கர்பெர்க்

இந்தியா வந்திருக்கும் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் நேற்று (செவ்வாய்க் கிழமை), தாஜ்மகாலுக்கு சென்றிருக்கிறார்.

உலக அதிசயங்களில் ஒன்றாக, காதலின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும் தாஜ்மகாலுக்குச் சென்ற மார்க், அங்கே கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் தனது புகைப்படத்தை, ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மாலை 04.30 மணி அளவில் பதிவேற்றப்பட்ட அப்பதிவில், 'டவுன்ஹால்- கேள்வி பதில்' நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருக்கிறேன். இந்தியா வருவது குறித்த திட்டத்தின் போதே, தாஜ்மகாலுக்குச் செல்ல முடிவு செய்துவிட்டேன். தாஜ்மகாலைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போழுதுமே எனக்குள் இருந்திருக்கிறது.

நான் எதிர்பார்த்ததைவிட தாஜ்மகால் மிகவும் அற்புதமாக இருக்கிறது. மக்கள் கட்டமைக்க முடிகிற விஷயங்களையும், அன்பு, மனிதர்களை அதற்கு ஊக்கப்படுத்தும் விஷயங்களையும் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது" என்று கூறப்பட்டிருந்தது.

மார்க்கின் இந்தப் பதிவு, 24 மணி நேரத்துக்குள்ளாகவே, 10 லட்சம் லைக்குகளைப் பெற்றிருக்கிறது. 20 ஆயிரம் பேர் இதைப் பகிர்ந்துள்ளனர்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, தாஜ்மகாலின் டிவிட்டர் கணக்கில் ட்வீட் செய்யப்பட்டிருக்கிறது. அதில், "நல்வரவு, மார்க் ஸக்கர்பெர்க். தாஜ்மகாலைப் போல, உங்களின் ஃபேஸ்புக்கும் அன்பைப் பகிர உதவுகிறது. இதைத் தொடர்ந்து செய்யுங்கள்!" என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழக அதிகாரிகளுக்கு, மார்க்கின் தாஜ்மகால் வருகை குறித்த தகவல் அளிக்கப்படவில்லை. தேவையற்ற கவனத்தைத் தவிர்க்கும் பொருட்டு மார்க், தனது வருகையைத் தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வுக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்க் ஸக்கர்பெர்க், இன்று (புதன்கிழமை) ஐஐடி டெல்லி டவுன்ஹாலில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x