Last Updated : 09 Jul, 2016 04:36 PM

 

Published : 09 Jul 2016 04:36 PM
Last Updated : 09 Jul 2016 04:36 PM

கதை, கவிதை, புத்தக விமர்சனம் எழுதும் பள்ளி மாணவர்கள்

ஆந்திர மாநிலம் பைதிபிமாவரத்தில் அமைந்துள்ள சில்லா பரிஷத் என்ற அரசுப் பள்ளி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காரணம் அப்பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களிலுள்ள பாடங்களை மட்டும் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை.

மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில் சிறுகதை எழுதுவது, கவிதைகள் எழுதுவது, புத்தகம், திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

அரசுப் பள்ளி என்றால் அதில் ஒரு நூலகம் அமைந்திருப்பதே பெரிய செய்தியாக இருக்கும் காலத்தில் பைதிபிமாவர சில்லா பரிஷித் பள்ளி கிட்டதட்ட 3500 புத்தகங்களை கொண்ட நூலகத்தை உருவாக்கியுள்ளது.

புத்தக வாசிப்பே நல்ல குடிமகன்களை உருவாக்கும்

மகடபள்ளி ராமசந்திரன் ராவ், பைதிபிமாவர சில்லா பரிஷித் பள்ளி ஆசிரியர்களில் ஒருவர். நூலகத்தை ஏற்படுத்தி இதன் மூலம் மாணவர்களிடம் புத்தக வாசிப்பு மற்றும் எழுதும் திறமையை முன்னேற்ற அடித்தளமிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி, மௌலானா அப்துல் கலாம் ஆசாத், ஜவஹர்லால் நேரு போன்ற சிறந்த தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி படிக்கும் போதுதான் மாணவர்கள் உண்மையான உலகை பற்றி அறிந்து கொள்ள முடியும். புத்தக வாசிப்பே மாணவர்களை நல்ல குடிமகன்களாக உருவாக்கும் என்று நம்புகிறார் ராமசந்திரன்.

மாணவர்கள் பயிற்சி அளிப்பதுடன் மட்டுமில்லாமல் பிற ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களால் எழுதப்பட்ட கவிதைத் தொகுப்பையும் கொண்டு வந்துள்ளார்.

நூலகம் குறித்து ராமசந்திரன் ராவ் கூறியதாவது: ''நூலகத்தின் மூலம் மாணவர்களின் கற்பனை வளர்ந்துள்ளது. புத்தக வாசிப்பு- மாணவர்களுக்கு, எந்த கருத்தையும் பரந்த நோக்கில் பார்க்கும் எண்ணத்தை வளர்த்துள்ளது. பல மாணவர்கள் மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றுள்ளனர். குறிப்பாக காவ்யா, திவ்யா என்ற மாணவிகள் கட்டுரைப் போட்டியில் பதக்கங்கள் வென்று எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்'' என்றார்.

மாணவர்களின் தனித் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தும் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் கல்வி அதிகாரி டி. தேவனந்தா ரெட்டி, தலைமையாசிரியர் ராஜலஷ்மி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஆரோபின்டோ ஃபார்மோ என்ற தனியார் நிறுவனம் பைதிபிமாவரம் சில்லா பரிஷத் ஆசிரியர்களின் செயல்பாடால் ஈர்க்கப்பட்டு நூலகத்தின் கட்டுமானத்திற்கு உதவ முன்வந்துள்ளது.

அப்பள்ளியின் மற்றொரு ஆசிரியர் ஸ்ரீதர காமேஷ்வர் ராவ் பள்ளி குறித்து கூறியதாவது:

''ராமசந்திரனின் செயல்பாடு இப்பள்ளியில் பல ஆசிரியர்களை ஈர்த்துள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுடன் நேரத்தை செலவிட்டு அவர்களின் தனித் திறமைகளை அறிந்து கொள்ள முடிகிறது. இது எங்களுக்கு தன்னிறைவு தருகிறது. பிற பள்ளி ஆசிரியர்களும் எங்கள் பள்ளியின் நூலகத்தை பார்வையிடுவது எங்களுக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது'' என்றார்.



























FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x