Last Updated : 15 Oct, 2015 11:21 AM

 

Published : 15 Oct 2015 11:21 AM
Last Updated : 15 Oct 2015 11:21 AM

பாஜக மீதான வெறுப்பால் உற்பத்தியான கிளர்ச்சி- அதிருப்தி எழுத்தாளர்கள் மீது ஜேட்லி சாடல்

மோடி அரசுக்கு எதிராக சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பித் தரும் போராட்டம் என்பது, பாஜக அல்லாத ஆட்சிகளில் அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர்களால் 'உற்பத்தி செய்யப்பட்ட கிளர்ச்சி' என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதை கண்டித்து எழுத்தாளர்கள் பலரும் தங்கள் விருதுகளை திருப்பி அளிக்கும் போக்கை, அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஜேட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பகிர்வின் விவரம்:

"இடதுசாரி மற்றும் நேரு சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட எழுத்தாளர்கள் பலரும் கடந்த ஆட்சியின்போது அரசின் அங்கீகாரத்தை பெற்றுவந்தனர். இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் இல்லை. இடதுசாரிகள் செல்வாக்கும் சரிந்து வருகிறது. இத்தகைய சூழலில் அவர்கள் அசவுகரியமாக உணர்கிறார்கள்.

காங்கிரஸ் மீள முடியாத நிலையில் இருப்பதைப் பார்த்தும், இடதுசாரிகள் தொடர்ந்து விளிம்பு நிலைக்கு செல்வதைப் பார்த்தும் சிலர் வேறு வழியில்லாமலேயே மோடி எதிர்ப்பு, பாஜக எதிர்ப்பு கோஷங்களை கிளப்பி வருகின்றனர்.

இது ஒருவிதமான அரசியல். ஒரு பிரச்சினையை உருவாக்கி, அதை வார்த்தைகளாக்கி அரசுக்கு எதிராக திருப்பிவிட்டு எழுத்தாளர்கள் ஒரு கிளர்ச்சியை உற்பத்தி செய்துள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை என்றாலும், நடந்த பிரச்சினைகள் காங்கிரஸ், சமாஜ்வாடி ஆளும் மாநிலங்களில் நடந்திருந்தாலும், வேண்டுமென்றே மத்திய அரசுக்கு எதிராக அனைத்துப் பிரச்சினைகளும் திரட்டப்பட்டு திருப்பிவிடப்பட்டுள்ளன.

பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற சில மாதங்களிலேயே ஊடகங்களில் பரவலாக சில செய்திகள் வெளியாகின. நாடு முழுவதும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது. தேவாலயங்கள் தாக்குதலுக்குள்ளாவதாக கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. நாட்டில் சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாப்பற்று உணர்வதாக கூறப்பட்டது.

ஆனால், விரிவான விசாரணையில் அனைத்து சம்பவங்களுமே திருட்டு நிமித்தமாக நடத்தப்பட்டது தெரியவந்தது. டெல்லியில் நடந்த எந்த ஒரு சம்பவத்துக்கும் மதமோ அல்லது அரசியலோ காரணமாக சொல்லப்படவில்லை. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது நீதி விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தில் ஈடுபட்டது வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அப்போது நடைபெற்ற போராட்டங்களில் இரண்டு விஷயங்கள் முன்நிறுத்தப்பட்டன. ஒன்று தாக்குதலுக்கு உள்ளானவர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது. மற்றொன்று கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம் குறித்து பிரதமர் மவுனமாக இருக்கிறார் என்பது.

ஆனால், இந்தச் சம்பவத்தில் எப்போது உண்மை வெளிச்சத்துக்கு வந்ததோ, அப்போதே தவறான கருத்துகளை அவதூறாக பிரச்சாரம் செய்தவர்களும் மாயமாகினர். அவதூறுகளும் மாயமாகின.

அதேபோல்தான் இப்போதும் சில காரணங்களுக்காக மோடி அரசுக்கு எதிராக காரணங்களை கண்டுபிடிக்க எழுத்தாளர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளனர்.

எம்.எம்.கல்புர்கி என்ற சிந்தனையாளர் கொல்லப்பட்டது காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், தபோல்கர் கொல்லப்பட்ட 2013 ஆகஸ்ட் காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி. தாத்ரி சம்பவம் நடந்த உ.பி.யில் ஆட்சியில் இருப்பது சமாஜ்வாதி கட்சி. அறிவுஜீவிகள் கொலை சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்பதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

இருப்பினும் சட்டம், ஒழுங்கைப் பேணி சமூகத்தின் சிறுபான்மை சமூகத்தினர் பாதுகாக்க வேண்டியது மாநில அரசுகளின் கடமை. ஆனால், அவற்றை வைத்து சிலர் ஆதாயம் தேடுகின்றனர்.

மாற்று அரசியலில் இது ஒரு வகை. வெவ்வேறு குற்றச் சம்பவங்களை ஒன்றாக இணைந்து அனைத்தையும் ஒரே கூடையில் போட்டு அதை மத்திய அரசுக்கு எதிராக திருப்புவது புதிய உத்தி.

ஒரு போராட்டத்தை மோடி அரசுக்கு எதிராக உற்பத்தி செய்ய வேண்டுமானால், அதற்கு எல்லா குற்றங்களுக்கு மத்திய அரசே காரணம் என திரித்துக் கூற வேண்டும். அதையே சிலர் செய்துள்ளனர்.

பத்ம்ஸ்ரீ விருதை திருப்பி அளித்துள்ள எழுத்தாளர் ஒருவர், 1984-ம் ஆண்டில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை காரணமாக சுட்டிக் காட்டியுள்ளார். ஓர் எழுத்தாளரின் மனசாட்சியை இன அழிப்புக்கு எதிராக எழும்ப 31 ஆண்டுகளா ஆகும்? இவையெல்லாம் வெறும் சாக்கு. இத்தகைய உற்பத்தி செய்யப்பட்ட கிளர்ச்சிக்கு பின்னால் இருப்பது என்னவோ பாஜகவின் கொள்கைகள் மீது சகிப்புத்தன்மை இல்லாததே.

இப்போது எதிர்ப்பு குரல் எழுப்பும் போராட்டக்காரர்களில் எத்தனை பேர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சிக்கு எதிராக குரல் கொடுத்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதேபோல், எத்தனை பேர் 1984 சீக்கிய கலவரத்துக்கு எதிராகவும், 1989-ம் ஆண்டு நடந்த பாகல்பூர் கலவரத்துக்கு எதிராகவும் குரல் கொடுத்தார்கள் எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். 2004-2014 காலகட்டத்தில் நடந்த ஊழல்கள் குறித்து எழுத்தாளர்களின் மனசாட்சி கொந்தளிக்காதது ஏன் என அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

எனவே, இந்தப் போராட்டங்கள் அனைத்துமே உற்பத்தி செய்யப்பட்டவை என்பதே எனது கருத்து" என்று அந்தப் பதிவில் ஜேட்லி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x