Published : 15 Feb 2017 11:12 AM
Last Updated : 15 Feb 2017 11:12 AM

ஊழலை ஏற்றுக் கொள்ள இச்சமூகம் பழகிவிட்டது: நீதிபதி அமிதவ ராய் வேதனை

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகளில் ஒருவரான அமிதவ ராய் சமூகத்தை அச்சுறுத்தும் ஊழல் விவகாரத்தை நாம் ஏற்று கொள்ளவே, சகித்துக் கொள்ளவே பழகிவிட்டோம் என்று வேதனை வெளியிட்டுள்ளார்.

இவர் தனது 3 பக்க தீர்ப்பில் ஊழலுக்கு எதிராக குடிமக்களின் சமூக விழிப்புணர்வுடன் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் ஊழல் என்பது புற்றுநோய் போல் பரவி ஊன்றியிருக்க நேர்மையானவர்கள் சிறுபான்மையாகி வருகின்றனர்.

ஊழல்வாதிகள் சகல அதிகாரங்களுடன் நடமாடி வருகையில் சாமானிய மனிதன் கவலையிலும் வெறுப்பிலும், மன உளைச்சலிலும் மவுனமாக இருந்து வருகிறான்.

குரல்வளையை நெறிக்கும் ஊழல் என்ற இந்த மரண துன்பத்திலிருந்து குடிமைச் சமூகத்தை விடுவிக்க அனைவரும் கூட்டாக ஒன்றிணைந்து கடமையுடன், தைரியமாக சகமனிதர்களின் துணையுடன் போராட வேண்டும்.

“இந்தப் புனித காரியத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும். நம் முன்னோர்கள் கனவு கண்ட, சுதந்திர இந்தியாவில் இத்தகைய உயரிய லட்சியத்திற்காக பலர் உயிர்த்தியாகங்கள் செய்துள்ளனர், நீதியும் சமத்துவமும், நிலையானதுமான சமூக ஒழுங்கை கட்டமைக்க நாம் அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும்” என்று தனது தீர்ப்புரையில் கூறியுள்ளார்.

மேலும் ‘நாட்டில் பெருகும் ஊழல் எனும் அச்சுறுத்தல் ஆழ்ந்த கவலையளிக்கிறது’ என்று கூறிய நீதிபதி ராய், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான இந்த ஊழல் வழக்கு ஊழலின் செயல்பாடுகள் குறித்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சமுதாயத்தில் நீக்கமற அனைத்து தரப்பிலும், படிநிலையிலும் படிந்து இறுகிப்போயுள்ள ஊழல் என்பதை நாம் ஏற்றுக் கொண்டு, அதனுடன் வாழவே பழகிவிட்டோம். இந்த வழக்கு இந்த அபாயத்தையே வெளிப்படுத்துகிறது. ’போதும் என்ற மனநிறைவெய்தாத இந்தப் பேராசைக்கு எதிராக சட்டமும், நீதியும் செயல்படுவது அவசியம்.

ஊழல் செய்பவர்கள் ஆதாரங்களின் போதாமைகள், விசாரணை நடமுறைகளின் முறைகேடுகள், விளக்கங்களின் சூட்சமங்கள் ஆகியவற்றின் பின்னால் தங்களை மறைத்துக் கொண்டு தப்புவதை அனுமதிக்கலாகாது. இதனை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும்.

நீதிமன்றங்கள் ஊழல் வழக்குகளை மனசாட்சியுடன் கையாண்டு, அறமுதிர்ச்சியுடன் செயல்பட்டு சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். இல்லையெனில் எதற்காக நீதி, நேர்மை, நியாயம் என்று வைத்திருக்கிறோமோ அது மறைந்து ஊழலே ஊன்றிவிடும்.

இவ்வாறு உணர்ச்சிப்பூர்வமாக 3 பக்க தீர்ப்புரையை அளித்தார் நீதிபதி ராய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x