Last Updated : 02 Jul, 2016 05:56 PM

 

Published : 02 Jul 2016 05:56 PM
Last Updated : 02 Jul 2016 05:56 PM

இந்தாண்டுக்கான சொத்து விவர அறிக்கை: முதலாவதாக வெளியிட்டார் அருண் ஜேட்லி

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, இந்தாண்டுக்கான தனது சொத்து மதிப்பு விவரங்களை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிட்டுள்ளார். முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது, இந்தாண்டு அவரின் சொத்து மதிப்பு, 8.9% குறைந்துள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களில் ஜேட்லி மட்டுமே இந்தாண்டு சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அலுவலக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி, 2014-15 நிதியாண்டில் ஜேட்லியின் மொத்த சொத்து மதிப்பு, ரூ.67.01 கோடியாக இருந்தது. இதுவே, 2015-16 நிதியாண்டில் ரூ.60.99 கோடியாக குறைந்துள்ளது.

முந்தைய நிதியாண்டை விட தற்போது, ஜேட்லியின் தங்க நகைகள் மீதான மதிப்பு, ரூ.9.9 லட்சம் கூடியுள்ளது. ஆனால், வங்கிக் கணக்கில் இருப்பு, ரூ.3.52 கோடியில் இருந்து, ரூ.1 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல் கார்களின் எண்ணிக்கையும், 5-ல் இருந்து 4-ஆக குறைந்துள்ளது.

ரொக்க கையிருப்பு மற்றும் வங்கிக் கணக்கிலும் முந்தைய ஆண்டை விட இந்தாண்டு குறைவான தொகையே உள்ளதாக ஜேட்லி வெளியிட்டிருக்கும் சொத்து விவர அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் அருண் ஜேட்லியின் சொத்து விவரங்களை சுருக்கமாக பார்த்தோமானால், டெல்லி, ஹரியாணா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 6 இடங்களில் அவருக்கு சொத்துக்கள் உள்ளன. அதில், ஒன்றைத் தவிர மற்ற 5 சொத்துக்களும் மனைவி சங்கீதா ஜேட்லியின் பெயரிலும் கூட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் கார்கள் 2, டொயோட்டா ஃபார்ச்சூனர் 1, ஹோண்டா அக்கார்டு 1 ஆகிய நான்கு கார்கள் தற்போது அவரிடம் உள்ளன. கடந்தாண்டு வைத்திருந்த பிஎம்டபுள்யூ கார் தற்போது அவரிடம் இல்லை. அவரின் அனைத்து கார்களும், 6666-ஐ பதிவு எண்ணாகக் கொண்டுள்ளன.

ஹெச்டிஎஃப்சி வங்கியில் 3 சேமிப்புக் கணக்குகளும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஒரு சேமிப்புக் கணக்கும் வைத்துள்ளார். மியூச்சுவல் ஃபண்டு போன்ற எதிலும் ஜேட்லி முதலீடு செய்யவில்லை. கம்பெனி டெபாசிட்டுகளாக மட்டும், எம்ப்ரியோ ஆயில்ஸ் மற்றும் டிசிஎம் ஸ்ரீராம் நிறுவனங்களில் ரூ.16 கோடி முதலீடு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x