Last Updated : 19 Jun, 2017 02:51 PM

 

Published : 19 Jun 2017 02:51 PM
Last Updated : 19 Jun 2017 02:51 PM

பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்

பிஹார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் (71), தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிடுவார் என பாஜக தலைவர் அமித் ஷா நேற்று அறிவித்தார்.

இப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. மனுத் தாக்கல் செய்ய வரும் 28-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்தத் தேர்தலில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் வேட்பாளரை நிறுத்த ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்தது. இது தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, வெங்கய்ய நாயுடு ஆகிய 3 பேர் கொண்ட குழுவை பாஜக தலைவர் அமித் ஷா அமைத்தார்.

இக்குழுவினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை கடந்த வாரம் நேரில் சந்தித்துப் பேசினர். மேலும் மத்திய அமைச்சரும் லோக் ஜன சக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் மூத்த தலைவர்களுடனும் இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

இதுபோல, பாஜகவின் நீண்டகால கூட்டணிக் கட்சியான சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் அமித் ஷா நேற்று முன்தினம் சந்தித்து, குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க, பாஜக ஆட்சி மன்றக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக நடத்திய ஆலோசனை குறித்து மூவர் குழு எடுத்துக் கூறியதாகக் கூறப்படுகிறது.

23-ல் மனுத் தாக்கல்

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமித் ஷா கூறும்போது, “தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிஹார் ஆளுந ராக உள்ள ராம்நாத் கோவிந்த் போட்டியிடுவார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி பேசி உள்ளார்.

தலித் மற்றும் பழங்குடியினர் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகவும் ராம்நாத் அயராது பாடுபட்டுள்ளார். வரும் 23-ம் தேதி அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வார். அனைத்து கட்சியினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வேட்பாள ராக அவர் இருப்பார் என்று நம்புகிறேன்” என்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான ராம்நாத் கோவிந்த், டெல்லி உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து 2 முறை மாநிலங்களவை உறுப்பி னராகவும், நாடாளுமன்றத்தின் பல்வேறு நிலைக்குழு உறுப்பின ராகவும் பதவி வகித்துள்ளார். பாஜகவின் தலித் மற்றும் பழங்குடி யினர் பிரிவின் தேசிய தலைவ ராகவும் பதவி வகித்துள்ளார்.

2-வது தலித் குடியரசுத் தலைவர்

ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டால் இந்தப் பதவியை எட்டிப் பிடித்த 2-வது தலித் சமூகத்தினர் என்ற பெருமையை பெறுவார். நாட்டின் முதல் தலித் குடியரசுத் தலைவராக கேரளா வைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

குடியரசுத் தலைவர் வேட்பாள ராக அறிவிக்கப்பட்டதையடுத்து, ராம்நாத் கோவிந்த் பிஹார் தலை நகர் பாட்னாவிலிருந்து நேற்று டெல்லி வந்தடைந்தார். இங்கு பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா அகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x