Last Updated : 07 Jul, 2015 08:03 AM

 

Published : 07 Jul 2015 08:03 AM
Last Updated : 07 Jul 2015 08:03 AM

தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்கு எதிரான கர்நாடக அரசு மனுவை ஏற்பதில் சிக்கல்: குறைபாடுகளை சுட்டிக்காட்டியது உச்ச நீதிமன்றம்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த‌ மேல்முறையீட்டு மனுவில் 10 குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தலைமையிலான குழு மனுவை திருத்தி வருவதால் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தாமதமாகும் என்று உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக‌ ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ல் நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தார்.

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கடந்த மே 11-ம் தேதி நால்வரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பில் பல அடிப்படை தவறுகளும் கணித பிழைகளும் இருப்பதால் க‌ர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

மேல் முறையீட்டு மனு தாக்கல்

இதனைத் தொடர்ந்து அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தலைமையிலான ச‌ட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஜெயலலிதாவுக்கு எதிரான‌ மேல்முறையீட்டு மனுவை தயாரித்தனர். இதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை திரட்டிய ஆதாரங்கள், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்கள், அரசு சான்று ஆவணங்கள் ஆகியவற்றை இணைத்தனர். மேலும் குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள சாதகமான அம்சங்களை யும், குமாரசாமியின் தீர்ப்பில் உள்ள பாதகமான அம்சங்களையும் குறிப்பிட்டனர்.

இதையடுத்து 2,377 பக்க மேல்முறையீட்டு மனுவை கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் மற்றும் ஆச்சார்யாவின் உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா ஆகியோர் கடந்த ஜூன் 23-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் தாக்கல் செய்தனர். 9 தொகுதிகளாக விவரிக் கப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற பதிவுத்துறை, குற்றவியல் வழக்குகளில் அனுபவம் வாய்ந்த 6 பேரை நியமித்தது.

இந்த சட்ட நிபுணர்கள் குழு கர்நாடக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஆராய்ந்ததில் 10 முக்கிய குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மனுவில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி தலைமை பதிவாளரிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. எனவே மேல்முறையீட்டு மனுவில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டார்.

10 முக்கிய குறைபாடுகள்

அதில், ''க‌ர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில் 1,223 மற்றும் 1,453 ஆகிய 2 பக்கங்கள் எதுவும் எழுதப்படாமல் காலியாக விடப்பட்டுள்ளது. இதேபோல 1,605-ம் பக்கத்தில் இருந்து 1,629-ம் பக்கம் வரை தாளின் மேற்பகுதியில் முறையாக பக்க எண் குறிப்பிடப்படவில்லை. மனுவை விசாரணைக்கு ஏற்கும் வகையில் அசல் பிரமாணப் பத்திரத்தை இணைக்கவில்லை. மேலும் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை மற்றும் ரத்து செய்யக்கோரும் முக்கிய வேண்டுகோளில் ஆணை வெளியான தேதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிபதி குன்ஹா மற்றும் குமாரசாமி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பல முக்கிய அரசு சான்று ஆவணங்களை மனுவில் இணைக்கவில்லை. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும் வழக்கில் வெளியான இறுதி தீர்ப்பு, மனு மீதான தீர்ப்பாணைகள், விசாரணை நீதிமன்றத்தின் முக்கிய‌ குறிப்புகள், வெளியிடப்பட்ட‌ அரசாணைகள், பின்இணைப்புகள், வழிகாட்டல்கள் ஆகியவை இணைக்கப்படவில்லை.

குறிப்பாக 28-4-2015 அன்று அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா நியமிக்கப்பட்டது தொடர்பான கர்நாடக அரசின் அரசாணை தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக மேல்முறையீட்டு மனு தயாரிக்கப்பட்ட தேதி, தாக்கல் செய்யப்பட்ட தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை''என உச்சநீதிமன்றம் 10 குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.

திருத்தப்படும் மனு

கர்நாடக அரசின் முக்கிய சட்ட நிபுணர்கள் தயாரித்த மேல்முறையீட்டு மனுவில் குறைபாடுகள் இருப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதால் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனு தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய சந்தேஷ் சவுட்டா, கர்நாடக அரசின் டெல்லி வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், சட்ட ஆலோசகர் பிரிஜேஷ் கல்லப்பா ஆகியோரிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து ஆச்சார்யா தலைமையிலான குழு மேல் முறையீட்டு மனுவை பல பிரிவுகளாக பிரித்து திருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x