Published : 28 Feb 2017 05:30 PM
Last Updated : 28 Feb 2017 05:30 PM

பிபிசி செய்தியாளர்- குழு இந்தியா வர 5 ஆண்டுகள் தடை : மத்திய அமைச்சகம் வலியுறுத்தல்

தெற்காசியாவுக்கான பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட் மற்றும் அவரின் குழுவினர் இந்தியாவுக்குள் நுழைய குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வனத்துறை துணை காவல் தலைவர் வைபவ் சி. மாத்தூர் இது தொடர்பான அலுவல் ஆணையை பிப்ரவரி 27 அன்று வெளியிட்டுள்ளார். இதில் 5 ஆண்டு காலத்துக்கு நாட்டின் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பிபிசி படமெடுக்கவும் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பிபிசி செய்தியாளர் ஜஸ்டின் ரெளலட்டின் ஆவணப்படமான ''ஒன் வோர்ல்ட்: கில்லிங் ஃபார் கன்சர்வேஷன்'' உருவாக்கத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அஸாமின் காசிரங்கா புலிகள் சரணாலயத்தில் விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களுக்கு எதிராகத் தொடங்கப்பட்டுள்ள செயல்பாடுகளை ஆய்வு செய்யும் விதமாக அந்த ஆவணப்படம் அமைந்திருந்தது.

அப்படத்தில், காண்டாமிருகத்தை வேட்டையாடுபவர்களைச் சுடவும், அவர்களின் உயிரைப் போக்கவும் காவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், ரெளலட் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகும் ஆவணப்படம் எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியிருந்த விதிமுறைகளை மீறிவிட்டார்.

ரெளலட் மற்றும் அவரின் குழுவினர், உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்து இந்திய அரசாங்க அதிகாரிகளைத் தவறாக வழிநடத்தத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் விலங்கு பாதுகாப்பு முயற்சிகள் முறையாகக் காட்டப்படவில்லை. இந்த ஆவணப்படம் முற்றிலும் தவறான முறையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

பிபிசி தரப்பில் இதுகுறித்து எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x