Published : 30 Mar 2014 10:54 AM
Last Updated : 30 Mar 2014 10:54 AM

தெலங்கானாவில் காங்கிரஸ் - இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி

தெலங்கானாவில் திடீர் திருப்பமாக காங்கிரஸுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, 10 சட்டமன்றத் தொகுதிகளிலும், ஒரு மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப் பட்டதும், தெலங்கானா ராஷ்டிர சமிதியுடன் (டி.ஆர்.எஸ்) கூட்டணி வைக்க காங்கிரஸ் முயற்சி மேற் கொண்டது. தொகுதி பங்கீடு செய்வதில் உடன்பாடு ஏற்படாததால், டி.ஆர்.எஸ். கட்சி விலகிச் சென்றது.

இதையடுத்து தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்படுவதை ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்துள்ளது. மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில், 10 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 17 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் போட்டி யிடுகிறது.

இது தொடர்பாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி செய்தித்தொடர்பாளர் சி.எச்.உமேஷ் ராவ் கூறும்போது, “கூட்டணி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும்” என்றார்.

நாட்டின் பிற மாநிலங்களில் காங்கிரஸை எதிர்த்து தீவிரமாக அரசியல் செய்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தெலங்கானா வில் அக்கட்சியுடன் கைகோக்க ஆயத்தமாகி யுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது.

கூட்டணி தொடர்பான இந்த புதிய முடிவு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டியிடம் கேட்டபோது, “கட்சியின் தெலங்கானா பிரிவு சார்பில், இந்த புதிய மாநிலத்தை தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதி அணுக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x