Published : 03 Jul 2016 10:39 AM
Last Updated : 03 Jul 2016 10:39 AM

ஹைதராபாத்தில் 5 தீவிரவாதிகள் கைது எதிரொலி: திருப்பதி கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

ஹைதராபாத்தில் சமீபத்தில் 5 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த 5 தீவிரவாதிகளையும், என்ஐஏ அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரிரு நாட்களில் கோயில்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிக அளவில் கூடும் முக்கிய இடங்களில் நாசவேலையில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, திருப்பதி ஏழு மலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில்,  காளஹஸ்தி சிவன் கோயில், கானிப்பாக்கம் வரசித்தி சுயம்பு விநாயகர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அனைத்து வாகனங் களும் அலிபிரி சோதனைச் சாவடி அருகே மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலமும் ஸ்கேனர்கள் மூலமும் மும்முரமாக தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. மலைப்பாதை முழுவதும் பாதுகாப்புப் பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருமலையில் பக்தர்கள் தங்கும் விடுதிகள், தலைமுடி காணிக்கை செலுத்தும் இடம், வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் மற்றும் விஐபிக்கள் தங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதப் படை போலீஸார், ஆக்டோபஸ் கமாண்டோ படையினர் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்தி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பதி நகரிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x