Last Updated : 22 Sep, 2016 10:59 AM

 

Published : 22 Sep 2016 10:59 AM
Last Updated : 22 Sep 2016 10:59 AM

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் பட்ஜெட் நிதி இரு மடங்காக அதிகரிப்பு: இந்தியாவில் தாக்குதல் நடத்த 70% ஒதுக்கீடு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்புக்கான பட்ஜெட் நிதி ஒதுக்கீடு, கடந்த 3 ஆண்டுகளில் இரு மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாதுகாப்புக்காக பாகிஸ்தான் அரசு கடந்த 2013-14-ம் ஆண்டில் ரூ. 2,800 கோடி ஒதுக்கியிருந்தது. அடுத்த நிதியாண்டில் இது ரூ. 4,800 கோடியாக உயர்ந்தது. 2015-16-ல் இது மேலும் அதிகரித்து ரூ.6,200 கோடியாக உள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் பாகிஸ் தான் அரசால் ஒதுக்கப்படும் இந்த தொகையில் சுமார் 70 சதவீதம் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயன் படுத்தப்படுவதாக தெரியவந் துள்ளது.

இது குறித்து மத்திய உளவுத் துறை வட்டாரம் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இஸ்லாமிய அறக் கட்டளைகள் தீவிரவாத குழுக் களை நடத்தி வருகின்றன.

பாதுகாப்புக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டின் 70 சதவீத தொகை இவற்றுக்கு நிதியுதவியாக அளிக் கப்படுகிறது. இஸ்லாமிய அறக் கட்டளைகள் நடத்தும் மதரஸாக் களில் இந்தியாவில் தாக்குதல் நடத்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க, ராணுவ அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கூட்டாட்சி அமைப்பின் கீழ் மாநில அரசு உள்ளது. பெயரளவிலான இந்த கூட்டாட்சி முறையில், முழுக்க முழுக்க தேசிய அரசின் (பாகிஸ்தான் அரசின்) அதிகாரமே மேலோங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் அனைத்தும் இங்கு அரசு ஆதரவுடன் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைத்துள்ளன. இத்துடன் ஒவ்வொரு தீவிரவாத அமைப்பும், இஸ்லாமிய அறக்கட்டளைகள் அமைத்து, அவற்றின் மதரஸாக் களில் தீவிரவாதப் பயிற்சி முகாம்கள் நடத்தி வருகின்றன.

இவற்றில், மவுலானா மசூத் அசார் நடத்தி வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப் புக்காக ஜமாத்-உத்-தவா, அல்-ரகமத் ஆகிய இரு அறக் கட்டளைகள் தீவிரமாக இயங்கி வருகின்றன.

இந்த மதரஸா மாணவர்கள் ‘ஜிகாத்’ எனும் பெயரில் இந்தியாவில் நடத்தும் தாக்குதலில் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அரசின் நிவாரணத் தொகை அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புகளிடம் பாகிஸ்தான் அரசு மூலம் நிதியுதவி பெற்றும் காஷ்மீரில் தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஜிகாத் மீதான தவறானப் புரிதல் காரணமாக இவ்வாறு ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜம்மு காஷ்மீரில் யூரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் நால்வரும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மோதலில் கொல்லப்பட்ட இவர்களுக்காக, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நேற்று முன்தினம் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பாக, வரும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ஜெய்ஷ்-இ-முகம்மது தலைவர் மவுலானா மசூத் அசார் அறிக்கை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x