Published : 11 Sep 2016 03:33 PM
Last Updated : 11 Sep 2016 03:33 PM

தமிழகத்துக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் கூடாது: ட்விட்டரில் சித்தராமையா வேண்டுகோள்

காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை ஒருபோதும் கூடாது என ட்விட்டரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து மண்டியா, மைசூரு, பெங்க ளூரு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளும்,கன்னட அமைப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மைசூரு- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு விவசாய சங்கத்தினர் சாலையில் டயர்களை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் போக்குவரத்து முடங்கியது. விவசாயிகள் சார்பில் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்பட்டது. அப்போது த‌மிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டிக்கும் வகையில் அவர்களது உருவ பொம்மைகளை தீயிட்டு எரித்தனர். இதைத்தொடர்ந்து நஞ்சன்கூடு சாலையில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

இதனிடையே சமூக வலைதளமான ட்விட்டரில் தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரங்களை கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் முன்னெடுத்து வருகின்றனர். அதில், காவிரி தண்ணீரைக் கோரும் தமிழகத்தின் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்களை கன்னடர்களோ, கன்னட அமைப்புகளோ ஒருபோதும் ஆதரிக்கக் கூடாது என ட்விட்டரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x