Last Updated : 13 Jul, 2016 07:14 PM

 

Published : 13 Jul 2016 07:14 PM
Last Updated : 13 Jul 2016 07:14 PM

உ.பி.யில் தன் மனைவிக்காக இந்து முறைப்படி இறுதி சடங்கு செய்த முஸ்லீம் கணவர்

உத்திரபிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் தன் இந்து மனைவிக்காக அவரது மதச்சடங்குப்படி இறுதி காரியம் செய்திருக்கிறார் முஸ்லீம் கணவர். மதக்கலவரத்திற்கு பெயர் போன இம் மாநிலத்தில் இந்த சம்பவம் அதிசயமாகப் பார்க்கப்படுகிறது.

காதல் சின்னமான தாஜ்மகால் அமைந்துள்ள நகரம் ஆக்ரா. இங்குள்ள ஜெய்சிங்புராவாசியாக இருப்பவர் 72 வயது லியாக்கத் அலி. இவர் சுமார் 36 வருடங்களுக்கு முன் கிருபா தேவி என்பவரை காதலித்து இரண்டாவதாக மணம் செய்துள்ளார். முதல் மனைவியுடன் ஒரே வீட்டில் கிருபா சேர்ந்து வாழ்ந்துள்ளார். இத்துடன், மதம் மாறாமல் அவரவர் சார்ந்த மதங்களை மதித்து வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இந்தநிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கிருபாவின் உயிர் நேற்று பிரிந்தது. இதனால், இந்து முறைப்படி அருகிலுள்ள மதுராவின் மசானியிலுள்ள சுடுகாட்டில் கிருபாவிற்கு இறுதி சடங்குகள் நடைபெற்றுள்ளது. இதை செய்த லியாகத் அலி, இறுதியில் கிருபாவின் சிதைக்கு தீயும் மூட்டியுள்ளார். கிருஷ்ணஜென்ம பூமியாகக் கருதப்படும் மத்துராவில் இறந்த இந்துக்களின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டால், அவர்களுக்கு மோட்சம் நிச்சயம் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கிருபாவிற்கு குழந்தைகள் பிறக்கவில்லை. எனவே, லியாகத்தின் முதல் மனைவியின் குழந்தைகளை தனதாக எண்ணி பாவித்துள்ளார் கிருபா. முஸ்லீம் வீட்டில் தன் வாழ்க்கையை நடத்தினாலும் கிருபா, கடைசி வரை ஒரு இந்துவாகவே வாழ்ந்திருக்கிறார். இதனால், லியாகத் வீட்டில் இந்து மற்றும் முஸ்லீம் பண்டிகைகள் இரண்டும் தவறாமல்கொண்டாடப்பட்டு வந்துள்ளதாக அவரது மகன் ஆசீப் கூறியுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x