Last Updated : 30 Sep, 2018 07:24 PM

 

Published : 30 Sep 2018 07:24 PM
Last Updated : 30 Sep 2018 07:24 PM

‘ஒட்டகப் பால் குடிக்கச் சொன்னபோது சிரித்தார்கள்’ - பிரதமர் மோடி பேச்சு

முதலாளித்துவம்,  சோசலிஸ்ட் மாதிரிகளுக்கு மாற்று,  கூட்டுறவு பொருளாதாரமே என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதேசமயம், நான் குஜராத் முதல்வராக இருந்தபோது ஒட்டகப் பால்குடிக்கச் சொன்னபோது அனைவரும் சிரித்தார்கள் என்றும் தெரிவித்தார்.

பிரதம் மோடி குஜராத் மாநிலம் அனந்த் நகருக்குச் சென்றுள்ளார். இன்று அங்கு நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.533 கோடியில் தொடங்கப்பட்டுள்ள அமுல் நிறுவனத்தின் சாக்லேட் நிறுவனத்தை மோடி தொடங்கி வைத்தார். மேலும், ரூ.8 கோடியில் அனந்த் வேளாண் பல்கலை சார்பில் உணவு பதப்படுத்தும் நிறுவனம், வித்யா டெய்ரியின் ரூ.20 மதிப்பிலான ஐஸ் க்ரீம் நிறுவனத்தைத் தொடங்கிவைத்தார்.

அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகளின் கூட்டுறவு இயக்கத்தால், உருவான அமுல் நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வருவதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். அமுல் நிறுவனம் நாட்டின் அடையாளமாக, ஊக்கமாக, தேவையாக மாறியுள்ளது. அமுல் நிறுவனத்தின் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையாக எடுக்கக்கூடாது, இது மாற்றுப்பொருளாதார முறையாகும்.

உலகளவில் அரசால் நடத்தப்படும் சோசலிஸ்ட் பொருளாதாரமும், முதலாளித்துவமும் இருந்த காலத்தில் மூன்றாவதாகக் கூட்டுறவு பொருளாதாரத்தைக் கொண்டுவந்தவர் சர்தார் வல்லபாய் படேல். இந்தக் கூட்டுறவு பொருளாதாரத்தில் விவசாயிகள், மக்கள் மட்டுமின்றி யார்வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இதுதான் சோசலிசம், முதலாளித்துவத்துக்கு மாற்றுப்பொருளாதாரமாகும்.

அகமதாபாத் நகராட்சியின் தலைவராக சர்தார் படேல் இருந்தபோதுதான் முதன்முதலில் நகர மேம்பாட்டுத் திட்டம் உருவானது. கூட்டுறவு வீட்டுவசதியை உருவாக்கி நடுத்தர மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை படேல்தான் உருவாக்கினார்.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, ஒட்டகப்பால் மிகவும் சத்துநிறைந்தது. அதைக் குடியுங்கள் என்றேன். ஆனால், என்ன தவறு செய்தேன் எனத் தெரியவில்லை. நான் கூறியதை கிண்டல் செய்து என்னைப் போன்று கார்டூன் வரைந்தார்கள், என் பேச்சை அவமானப்படுத்தினார்கள், கிண்டல், கேலி செய்தார்கள். ஆனால், இன்று அமுல் சாக்லேட் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் பசும்பால் சாக்லேட்டைக் காட்டிலும், ஒட்டகப்பால் சாக்லேட்கள் அதிகவிலையும், இரட்டை லாபமும் ஈட்டித் தருகிறது.

விவசாயிகளின் துயரத்தைதீர்க்க வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்ற வேண்டும். அந்த நோக்கத்தில்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பால் பதப்படுத்துதல், உணவு பதப்படுத்துதல் போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகிறோம்.

விவசாயிகள் வேளாண் கழிவுப்பொருட்களில் இருந்தும் புதிதாக உருவாக்க முயற்சிக்க வேண்டும். குறிப்பாகப் பசுவின் சாணத்தில் இருந்து ஏராளமான பொருட்கள் தயாரிக்கலாம்

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x