Published : 25 Sep 2018 10:26 AM
Last Updated : 25 Sep 2018 10:26 AM

பெங்களூருவில் நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழை: திடீர் வெள்ளத்தில் சிக்கிய அடுக்குமாடி குடியிருப்புகள்

பெங்களூருவில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழையால், இரவோடு இரவாக வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏரி தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் தத்தளிக்கும் சூழல் ஏற்பட்டது.

தென்மேற்கு பருவமழை விடை பெற இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் இறுதிகட்டமாக பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் பெங்களூருவில் ஞாயிறு நள்ளிரவு முதல் கனமழை பெய்யத் தொடங்கியது. நேற்று அதிகாலை வரை விடாது மழை கொட்டித் தீர்த்தது. நள்ளிரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தனர்.

பெங்களூரு ஹூலிமாவு ஏரி ஏற்கெனவே நிரம்பு நிலையில் இருந்தது. திடீரென கனமழை பெய்ததால் ஏரி நிரம்பி உபரி நீர் முழுவதும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

ஹூலிமாவு லேக் சாலை, பனரேஹட்டா சாலை, ஹமிஹரி சாலை உள்ளிட்ட இடுங்களில் தண்ணீரால் நிரம்பியது. சற்று நேரத்தில் மிதமிஞ்சிய வெள்ளம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.

ஆஸ்ரமா மெயின் ரோடு, டியோடேட் பப்ளிக் ஸ்கூல் ரோடு, வசந்தபுரா, பாலாஜிநகர், உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத்தளத்தில் தண்ணீர் சூழ்ந்தது.

அதிகாலை 4:00 மணியளவில் திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். தங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

வெள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு பகுதிக்குள்ளும் வெள்ளம் சூழந்தபின் மக்கள் வெள்ளக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தங்கள் நிலைமையை கூறியபடி இருந்தனர்.

தண்ணீரை வெளியேற்ற பெங்களூரு மாநகராட்சி ஊழியர்களும் அதிகாலை வேளையில் களம் இறங்கினர். ஏரி நிறை வேறு பகுதிக்கு திருப்பி விட்டனர். முதல்கட்டமாக தண்ணீர் வடியத் தொடங்கியது. பின்னர் சாலை, அடுக்குமாடி குடியிருப்புகளில் புகுந்த நீரை வெளியேற்றவும் விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதுகுறித்து ஹூலிமாவு ஏரி சாலையில் வசிக்கும் சங்கரநாராயணா என்பவர் கூறுகையில்‘‘ அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் எங்கள் வீடு உள்ளது. அதிகாலை 4:00 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அலறியடித்துக் கொண்டு செய்வதறியாமல் திகைத்தோம். பின்னர் உடனடியாக மாடியின் மேல் தளத்துக்கு சென்று தங்கினோம்.

நேற்று மாலை தான் தண்ணீர் வடிந்தது. அதன் பிறகே கிழே இறங்கி வந்தோம். வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்து வெள்ளத்தில் நனைந்து பாழாகி விட்டன’’ என்றார். அந்த பகுதியில் தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x