Published : 04 Jun 2019 12:00 AM
Last Updated : 04 Jun 2019 12:00 AM

இந்தியை திணிப்பதும், எதிர்ப்பதும் தவறு: குடியரசு துணைத் தலைவர் கருத்து

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே காதங்கி பகுதியில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பரிசோதனை மையத்தில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் அன்றாட வாழ்வு மேம்படும் வகையில் விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம். மக்களின் ஆரோக்கியம், நாட்டின் அமைதி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். இயற்கையை பாதுகாக்க தவறியதால்தான் மழை குறைந்து, வேளாண் உற்பத்தியும் குறைந்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பிறகும் 20 சதவீதம் பேர் வறுமையில் உள்ளனர்.

படிப்பறிவில்லாதவர்கள் 20 சதவீதமாக உள்ளனர். ஆனால், 35 வயதுக்குட்பட்டவர்கள் நம் நாட்டில் 65 சதவீதம் பேர் உள்ளனர். இது நமக்கு பெருமை. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகவே உள்ளது. இதற்கு நம் நாட்டு மக்களின் உழைப்புதான் காரணம். கற்றுக்கொள்வது என்பது நம் வாழ்க்கையின் ஒரு அங்கம். இதை எதிர்ப்பது சரியல்ல. அதேநேரம் ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என திணிப்பதும் சரியல்ல.

இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் திருப்பதிக்குச் சென்ற அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். நேற்று இரவு திருமலையில் தங்கிய வெங்கய்ய நாயுடு இன்று ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x