Published : 17 Mar 2018 12:29 PM
Last Updated : 17 Mar 2018 12:29 PM

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மியான்மர் ராணுவம் மற்றும் சில புத்த மத குழுக்கள் அங்குள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது 2017-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு அகதிகளாக வருகை தரும் இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு தரும் நிவாரண உதவிகளை தங்களுக்கும் வழங்க வேண்டும் என, ரோஹிங்கியா முஸ்லிம்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், மத்திய அரசு வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது. அந்த பதில் மனுவில் மத்திய அரசு தெரிவித்ததாவது,

“இலங்கை தமிழர்களையும் ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது. அவ்வாறு கருதினால் இந்த விவகாரத்தை தவறாக புரிந்து கொள்வது போன்றதாகும்.

இந்தியா - இலங்கை நாடுகளிடையே 1964 மற்றும் 1979-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்திய அரசு இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறது” என தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய எல்லையில் மிளகாய் எறிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் உபயோகப்படுத்துவதாக கூறும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் குற்றச்சாட்டை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுத்துள்ளது. சவாலான சூழ்நிலைகளில் எல்லை பாதுகாப்புப் படையினர் தங்கள் கடமைகளை நிறைவேற்றி வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாட்டவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைவதை உறுதிப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும், இந்தியாவுக்குள் வெளிநாட்டவர்கள் நுழைய பாஸ்போர்ட் வேண்டும் எனவும், மத்திய அரசு தன்னுடைய பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x