Last Updated : 20 Mar, 2018 05:53 PM

 

Published : 20 Mar 2018 05:53 PM
Last Updated : 20 Mar 2018 05:53 PM

உ.பி. மாநிலங்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை செய்யவில்லை: பாஜக மீது கூட்டணிக் கட்சிகள் புகார்

மார்ச் 23-ல் உ.பி.யில் மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக பாஜக தங்களிடம் ஆலோசனை செய்யவில்லை என அதன் கூட்டணிக்கட்சி்கள் புகார் எழுப்பியுள்ளன.

உ.பி. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 10 உறுப்பினர்களில் 8 பாஜகவிற்கு எளிதாகக் கிடைக்க உள்ளது. மற்ற இரண்டில் ஒன்று அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதிக்கு கிடைக்கும். மீதம் உள்ள ஒன்றை மாயாவதியின் பகுஜன் சமாஜ் பெற முயல்கிறது.

இந்த ஒரு உறுப்பினர் பதவியை குறி வைத்து பாஜகவும் தன் கட்சி சார்பில் கூடுதலாக ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதில் வெற்றிபெற பாஜகவிற்கு தேவையான கூடுதல் வாக்குகள் அதன் கூட்டணிகளிடமும் உள்ளது.

மத்திய மருத்துவ நலத்துறையின் இணை அமைச்சரான அனுபிரியா பட்டேலின் அப்னா தளம் கட்சிக்கு 9 எம்எல்ஏக்கள் உள்ளனர். மற்றொரு கூட்டணி உறுப்பினரான சுஹேல்தியோ பாரதிய சமாஜ் கட்சிக்கு (எஸ்பிஎஸ்பி) 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்கள் வாக்குகளைப் பெற பாஜக இதுவரை அவர்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

இது குறித்து எஸ்பிஎஸ்பியின் தலைவரும், உ.பி. கேபினேட் அமைச்சருமான ஓம் பிரஷாஷ் ராஜ்பர் கூறும்போது, ''மாநிலங்களவைக்கான வேட்பாளரை அறிவிக்கும் முன் எங்களிடம் நடத்த வேண்டிய ஆலோசனையை பாஜக செய்யவில்லை. இதேபோல், பூல்பூர், கோரக்பூர் இடைத்தேர்தலுடன், உள்ளாட்சி தேர்தலிலும் செய்யவில்லை. வேட்பாளர் தேர்வு செய்ய வேண்டியது பாஜகவாக இருப்பினும் ஒரு கூட்டணி தர்மத்திற்காகவாவது ஆலோசனை செய்திருக்கலாம்'' எனத் தெரிவித்தனர்.

கோரக்பூரில் எஸ்பிஎஸ்பி கட்சிக்கு சுமார் 30,000 வாக்குகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதை தமக்கு பெற்றுத்தர வேண்டி அக்கட்சியினை பிரச்சாரத்திற்கும் பாஜக அழைக்கவில்லை. இதுபோன்ற காரணங்களால் நேற்று லக்னோவில் நடைபெற்ற பாஜகவின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை கூட்டணிக்கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர். மாநிலங்களவைத் தேர்தலையும் புறக்கணிப்பதாக எச்சரித்துள்ளனர்.

மாநிலங்களை உறுப்பினர் பதவி வெல்ல குறைந்தது 37 எம்எல்ஏக்கள் வாக்குகள் அவசியம். இதில், பாஜகவிடம் அதிகமாக 13 வாக்குகள் உள்ளன. கூட்டணி மற்றும் கட்சி மாறி விழும் வாக்குகள் இல்லாமல் பாஜகவால் ஒன்பதாவது உறுப்பினர் பதவியை வெல்ல முடியாத நிலை உள்ளது.

மாயாவதி கட்சியிடம் 19 வாக்குகள் உள்ளன. பற்றக்குறையான 18 எம்எல்ஏக்களை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி அளிக்க உறுதி அளித்துள்ளனர். எனினும், அதன் இறுதி முடிவு மார்ச் 23 தேர்தல் அன்று மாலை தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x