Last Updated : 13 Mar, 2018 06:13 PM

 

Published : 13 Mar 2018 06:13 PM
Last Updated : 13 Mar 2018 06:13 PM

‘முழு மோசடி தவிர வேறேதுவும் அல்ல’ : ஹரியாணாவில் கையகப்படுத்தப்பட்ட 912 ஏக்கர்கள் செல்லாது; உச்ச நீதிமன்றம் அதிரடி

ஹரியாணாவில் முதல்வர் புபீந்தர் சிங் ஹூடா ஆட்சியின் போது தனியார் கட்டுமான நிறுவனங்கள் சட்ட விரோதமாகக் கையகப்படுத்திய 912 ஏக்கர்கள் நிலக் கையகத்துக்கான ஒப்பந்தங்கள் எதுவும் செல்லாது, இது முழுக்க முழுக்க மோசடியே என்று கூறி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஹூடா ஆட்சியை சாடிய உச்ச நீதிமன்றம், அதிகார துஷ்பிரயோகம், மோசடி தவிர இது வேறெதுவும் அல்ல என்று கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு மாநில மத்திய அரசுகள் ஒவ்வொரு பைசாவையும் மீட்டு அரசுக் கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

912 ஏக்கர்கள் நிலம் 2004-2007-ல் மனேசர், லக்னவ்லா, நவ்ரங்பூர் ஆகிய 3 கிராமங்களிலிருந்து சட்ட விரோதமாகக் கையகப்படுத்தப்பட்டதாகும். அதாவது தொழிற்துறை டவுன்ஷிப் உருவாக்க கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு விவசாயிகள் குறைந்த விலைக்கு நிலங்களை விற்றுள்ளனர்.

முதலில் நிலம் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 லட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. கையக நடைமுறை தொடங்கியவுடன் விலை ரூ.80 லட்சத்துக்கு உயர்ந்தது. கடைசியாக டிஎல்எப் நிறுவனம் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4.5 கோடி கொடுத்து வாங்கியது.

இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், உதய் லலித் கூறும்போது, “இது ஏதோ போனன்ஸாவோ டீலோ மட்டுமல்ல, சாதகப் பலன்களுக்குச் செய்யும் மாற்றுச் சாதகப் பலனே” என்று கூறினர்.

2007-ல் ஹூடா அரசு கையகப்படுத்தலை ரத்து செய்தது. இதனைக் குறிப்பிட்ட நீதிபதிகள், “ரத்து செய்தது மோசடியான நோக்கங்களுக்காகவே. அதாவது தனியார் கட்டுமான நிறுவனம் வாங்கிய பிறகு மாநில அரசு ரத்து செய்துள்ளது. மேலும் இந்த ஒட்டுமொத்த நிலம் கையக நடைமுறைகளும் சட்டவிரோதமாக நிலக் கையக சட்டத்துக்கு புறம்பாக நடந்தேறியுள்ளது.” என்று அதிரடியாகக் கூறியுள்ளது.

மேலும் இந்த ஒட்டுமொத்த நடைமுறையிலும் இடைத்தரகர்கள் பெரிய அளவில் பணம் பார்த்து விட்டார்கள் என்பது ஆதாரபூர்வமாக தெரிந்ததாக உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது.

மேலும் நிலத்தை அளித்தவர்கள் அதற்கான தொகையைப் பெற்றுவிட்டதால் இந்த நிலங்கள் அவர்களுக்குத் திரும்பி அளிக்க முடியாது என்றும், இந்த நிலம் ஹரியாணா நகர்ப்புற வளர்ச்சி ஆணையம், ஹரியாணா தொழிற்துறை வளர்ச்சி கார்ப்பரேஷன் ஆகியவற்றிடம் இருக்கும். எனவே கட்டுமான நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நில உரிமையாளர்களுக்குக் கொடுத்த பணத்தை திரும்பப் பெறவும் முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x