Last Updated : 18 Mar, 2018 07:26 AM

 

Published : 18 Mar 2018 07:26 AM
Last Updated : 18 Mar 2018 07:26 AM

‘எம்ஜிஆர் எங்கே.. திராவிடம் எங்கே?’: டிடிவி தினகரனின் புதுக்கட்சியால் சசிகலா அதிருப்தி

ஜெ

யலலிதா மரணத்துக்கு பிறகு அதிமுகவை சசிகலா கைப்பற்றினார். முதல்வர் கனவை நோக்கி பயணித்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரது கனவை கலைத்தது. அரசியல் எல்லைக்கு அப்பால் இருந்த தனது அக்கா மகன் டிடிவி தினகரனை அழைத்துவந்து, ‘துணைப் பொதுச்செயலாளர்’ ஆசனத்தில் அமர வைத்தார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா நுழைந்த சில நாட்களில், இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தினகரன் திஹார் சிறைக்கு போனார். பிரிந்திருந்த ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைந்த கைகளாக மாற, ஆர்கே நகரில் சுயேச்சையாக தினகரன் வாகை சூடியது சசிகலாவுக்கு ஆச்சரியம்தான்.

“எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம். அதனால் தனிக்கட்சி கட்டாயம். அப்போதுதான் அரசியல் எதிரிகளை அழிக்கவும், அதிமுகவை கைப்பற்றவும் முடியும்” என பரப்பன அக்ரஹாராவில் சசிகலாவிடம் பிடிவாதம் காட்டினார் தினகரன். “18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வரட்டும். அதுவரை பொறுமையாக இரு” என்றார் சசிகலா. ஆனால் அடுத்த சில தினங்களில், “மேலூர் கூட்டத்தில் தனிக்கட்சியை தொடங்கப்போகிறேன்” என தடாலடியாக அறிவித்தார் தினகரன்.

பந்தகால் நட்டு, பந்தல் போட்டு, ஊருக்கே பத்திரிகை கொடுத்த பிறகு, கடமைக்கு பரப்பன அக்ரஹாராவுக்கு வந்தார் தினகரன். “நீதிமன்றத்தில் சொன்ன அம்மா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக), எம்ஜிஆர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் (எம்.அதிமுக), எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் (எம்அதிக) ஆகிய 3-ல் ஒரு பெய‌ரை கட்சிக்கு வைக்க போகிறேன்” என சொன்ன தினகரனிடம் சசிகலா பெரிதாக பேசவில்லை. அன்றைய தினம் சிறையில் நடந்தது புதுக்கட்சியின் கொள்கை வரைவு மீட்டிங் அல்ல. மன்னார்குடி குடும்ப அதிகார பகிர்வு மீட்டிங்.

தினகரன், அவரது மனைவி அனுராதாவை ஒரு பக்கமும், விவேக், அவரது மனைவி கீர்த்தனாவை மறுபக்கமும் அமர வைத்து சசிகலா மத்தியஸ்தம் செய்தார். அரசியலை தினகரனும், சொத்தை விவேக்கும் பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆணையிட்டார். வெளியே வந்த தினகரனோ புதுக்கட்சிக்கு சசிகலாவிடம் ஆசிர்வாதம் வாங்கினேன் என சிரித்தார்.

அரசியலிலும் குடும்பத்திலும் தனக்கு எதிராக தலைதூக்கும் புள்ளிகளுக்கு மேலூரில் முற்றுப்புள்ளி வைக்க முடிவெடுத்தார். யாரும் எதிர்பார்க்காத அளவில் கூட்டத்தை கூட்டி, “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” (அமமுக) என புதுப்பெயரை அறிவித்தார். கட்சியில் பொறுப்பு தரவில்லை, பதவி வழங்கவில்லை என பலரும் புலம்பிய நிலையில் கட்சியின் பெயரே பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

ஆதி முதல் தினகரனுக்கு முட்டுக்கொடுத்த நாஞ்சில் சம்பத், “கட்சிப்பெயரில் திராவிடம் இல்லை. அண்ணா இல்லை” என்று கூறி கட்சியில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்டார். புகழேந்தி, கலையரசன் போன்றவர்களோ “திராவிடம் இல்லாததது வருத்தம்தான். இருந்திருந்தால் நல்லா இருக்கும்” என உள்ளுக்குள்ளே புழுங்குகிறார் கள். மேலூர் கூட்டத்தை பரப்பன அக்ரஹாராவில் இருந்தவாறே நேரலையில் பார்த்த சசிகலா கோபத்தின் உச்சத்துக்கே சென்றார். “என்கிட்ட ஒன்னு சொல்லிட்டு, அங்கே போய் வேற ஒன்ன செய்யறாப்ல. கட்சி பெயரில் ‘திராவிடம்’ எங்கே? எம்ஜிஆர் எங்கே? இத்தனை வருஷமா அண்ணா நாமம் வாழ்க, எம்ஜிஆர் நாமம் வாழ்க என பேசிவிட்டு, இப்போ தூக்கிப்போட்டது சரியா? கொடியிலாவது ஒரு பக்கம் எம்ஜிஆர், இன்னொரு பக்கம் அண்ணா படத்தை போட்டு இருக்கலாமே? 18 பேர் வழக்குல தீர்ப்பு வர்ற வரைக்கும் பொறுக்க வேண்டியது தானே? யாரைக்கேட்டு இதெல்லாம் செஞ்சிட்டு இருக்காப்ல?” என இளவரசியிடம் பொறிந்து தள்ளியிருக்கிறார் சசிகலா. தனக்கு நெருக்கமான பெங்களூரு வழக்கறிஞர் மூலம் தினகரனுக்கு டோஸ் கொடுத்தாராம்.

இதையறிந்த இளவரசியின் மகள் விஷ்ணு பிரியாவும், திவாகரனின் மகன் ஜெயானந்தும் சசிகலாவை சந்திக்க தேதி கேட்டிருக்கிறார்கள். வரும் வாரத்தில் அவர்கள் சசிகலாவை சந்திப்பார்கள். அதன் பிறகு கட்சியிலும், குடும்பத்திலும் பூகம்பம் வெடிக் கும் என்கிறார்கள். ஆனால் தினகரனோ “வரும் தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் கட்டாயம் குக்கர் விசிலடிக்கும். நான்தான் அடுத்த சிஎம்” என மந்தகாசமாக சிரிக்கிறாராம்.

“அரசியலில் குதித்த சில காலங்களிலே எம்பி பதவி வரை எட்டிப்பிடித்த தினகரனை, ஜெயலலிதா ஏன் 14 ஆண்டுகள் ஒதுக்கி வைத்தார்?” என சசிகலாவுக்கு இப்போது புரியத் தொடங்குகிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x