Published : 22 May 2019 12:00 AM
Last Updated : 22 May 2019 12:00 AM

உலகம் எதிர் நோக்கும் நிலையான இந்திய ஆட்சி

மக்களவைத் தேர்தல் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த ஒரு வாரத்தில் பொதுத் தேர்தல் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விடலாம். தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் நீங்கி, எப்போதும்போல அரசு செயல்படத் தொடங்கலாம்.

1951 -52-ல் நடந்த முதல் பொதுத் தேர்தல் தொடங்கி, இப்போதைய 17-வது மக்களவைத் தேர்தல் வரை பல புதிய முயற்சிகள், பல புதிய வடிவங்களை பொதுத் தேர்தல் கண்டு வருகிறது. ஒரு அம்சம் மட்டும் நிரந்தரமாக, என்றும் மாறாததாக இருக்கிறது. அதுதான் 'மக்களின் அங்கீகாரம்'.

தேர்தல் முடிவுகள் என்னவாக இருந்தாலும், அதனை இந்தியக் குடிமக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்வதும், வெற்றி, தோல்வி எதுவாக இருப்பினும், அரசியல் கட்சித் தலைவர்கள் அதற்குக் கட்டுப் படுவதும், இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமாக தனித்து நிற்கிறது. இதுதான் உலக நாடுகளின் பார்வையை இந்தியாவின் பக்கம் திரும்ப வைக்கிறது.

எத்தனை கடுமையான, கசப்பான போட்டி நிலவினாலும், ஆட்டத்தின் முடிவில், மக்களின் தீர்ப்புக்குத் தலை வணங்கி, அடுத்த வேலையை பார்க்கப் போய் விடுகிற அரசியல் கட்சிகள், நமது ஜனநாயகத்தின் ஆகச் சிறந்த வலுவூட்டிகள். 130 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகை; 90 கோடிக்கு மேலான வாக்காளர்கள்; சுமார் 10 லட்சம் வாக்குச் சாவடிகள்; 70 லட்சம் தேர்தல் பணியாளர்கள்..... கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்காக என்று நான்கு திசைகளிலும் பரந்து விரிந்த ஒரு நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக அத்தனை பகுதிகளையும் சென்று சேர்கிற தேர்தல் நடைமுறைகள்... சந்தேகம் இன்றி, நவீன உலகின் மிகப்பெரிய மேலாண்மை சாதனை. இதற்கு இணையாக வேறு ஒன்று இல்லை.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நன்கு முன்னேறிய ஐரோப்பிய நாடுகளில்கூட, இந்தியத் தேர்தல் ஆணையம், பரவலாகப் பாராட்டப்படுகிறது. பொதுவாக எந்த ஒரு பெரிய நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தாலும் மற்ற பல நாடுகளில் அது பற்றிய செய்தி, எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். அதிலும், நவீன தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சி, ஒவ்வொரு நாட்டின் பொதுத் தேர்தலையுமே ஒரு வகையில் பரபரப்பானதாக பதற்றம் நிறைந்ததாக மாற்றி விட்டது.

இந்தியப் பொதுத்தேர்தலைப் பொறுத்தவரை ஆங்காங்கே நடைபெறும் தனிப்பட்ட ஒரு சில சம்பவங்கள் தவிர்த்து பொதுவாக அமைதியாகவே நடைபெற்று வருகிறது. மக்களின் ஆர்வம், ஈடுபாடு, பங்களிப்பு ஆகியவை ஒவ்வொரு தேர்தலுக்கும் கூடியே வருகிறது.

அச்சு, காட்சி மற்றும் சமூக ஊடகங்களின் பணியும் பொதுவாக பாராட்டத் தகுந்ததாகவே இருக்கிறது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, தொடர்ந்து அல்லது மாறி வரும் அரசுகளின் கொள்கைத் தொடர்ச்சி.

இந்திய அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள், தேர்தலுக்குப் பின்னர், விட்ட இடத்தில் இருந்தே தொடரும். அரசின் பொருளாதாரக் கொள்கை, அயலுறவுக் கொள்கை, பாதுகாப்பு தொடர்பான கொள்கை என்று எதிலும் பெரிய, தலைகீழ் மாற்றம் இருப்பதே இல்லை. இந்திய அரசின் தலைமைப் பொறுப்பில் யார் இருந்தாலும், அயல் நாடுகளுடன் முந்தைய அரசுகள் செய்துகொண்ட ஒப்பந்தங்கள், பேச்சு வார்த்தைகள் எந்தவிதத் தடங்கலும் இன்றி எப்போதும்போல தொடரும்.

இந்தத் தொடர்ச்சிதான், நம் நாட்டின் மீது சர்வதேச அரங்கில் அசைக்க முடியாத, வலுவான நம்பகத் தன்மையை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜ்ஜிய உறவுகள், வர்த்தக உடன்படிக்கைகள், சர்வதேச விதிமுறைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்ட வடிவங்களை, தேர்தலுக்குப் பிந்தைய இந்திய அரசு முழுவதுமாகப் பின்பற்றுமா என்பதில் எந்த நாட்டுக்கும் எந்த அமைப்புக்கும் சற்றும் அச்சம், தயக்கம் இருந்ததே இல்லை. அரசியல் வேறு; அரசாங்கம் வேறு என்கிற தெளிவு நம் தலைவர்களிடம் இருக்கிறது.

அகதிகள் பிரச்சினை, பாலஸ்தீன விடுதலை, போருக்கு எதிரான சமாதான முயற்சிகள், அரபு நாடுகளுடன் சுமுக உறவு, ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவிக் கரம், ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிக் குழுக்களில் தீவிர பங்களிப்பு, வறுமை ஒழிப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உலக வங்கி, உலக வர்த்தக நிறுவனம், சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் என்று எல்லா தளங்களிலும், எல்லாத் தரப்புகளிலும் நேற்றைய ஆதரவு /எதிர்ப்பில் தொடர்ந்து நிற்பது… இந்தியாவின் தனிக் குணம்.

சர்வதேச நிதியுதவி, அந்நிய முதலீடு, பங்கு வர்த்தகம், நுகர்வோர் சந்தை, பன்னாட்டு நிறுவனங்கள்... ஒரு பக்கம். மண் சார்ந்த மரபுத் தொழில்கள், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் பண்பாட்டு, கலாச்சார உறவுகள் மறுபுறம். இரண்டுக்கும் இடையே, சமரசம் செய்து கொள்ளாது 'சமன் செய்து' பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் பணிதான், தொடரப் போகிறது.

தனக்கான தனி அடையாளத்தை இழந்து, உலகின் ஒரு பகுதியாகத் தன்னை முன்னேற்றிக் கொள்வதில்தான் வளரும் நாடுகளின் எதிர்காலம் அடங்கி இருப்பதாக ஒரு மாயத் தோற்றத்தை வல்லரசுகள் உருவாக்கி வைத்துள்ளன. இந்த விஷயத்தில், அமெரிக்காவின் ஏகாதிபத்திய அணுகுமுறைக்கு சற்றும் சளைத்ததல்ல செஞ்சீனாவின் எதேச்சாதிகாரம்.

தற்போதுள்ள சூழலில், இந்தியா போன்ற 'மென்மை' நாடுகளின் அரசுகள், வலுவானதாக, நிலையானதாக அமைய வேண்டும் என 'மூன்றாம் உலகம்' எதிர்பார்க்கிறது.

வல்லரசுகளுக்குத் துணை போகப் போகிறோமா...? வறிய நாடுகளின் குரலை எதிரொலிக்கப் போகிறோமா...? 'பூனைக்கும் தோழன்; பாலுக்கும் காவல்' என்கிற நிலையிலேயே தொடர்ந்து பயணிக்க இருக்கிறோமா...?உலக நாடுகள் இந்தியாவை, தேர்தல் முடிவுகளைத் தாண்டி, அதற்கும் அப்பால் நிறுத்திப் பார்க்கவே விரும்புகின்றன. வல்லரசுகளுக்கு அடி பணியாத, ஒரு புதிய ஆரோக்கியமான உலக அமைப்பு முறை, சாத்தியம் ஆகுமா...? நம் தலைவர்களின் பொறுப்பு கூடிக் கொண்டே வருகிறது. இதை அவர்கள், உணர்ந்து இருக்கிறார்களா...?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x