Published : 25 May 2019 12:42 PM
Last Updated : 25 May 2019 12:42 PM

சூரத் தீ விபத்து: கோச்சிங் சென்டர் உரிமையாளர் கைது; 2 கிமீ தூரத்திற்கு 45 நிமிடங்கள் எடுத்துக் கொண்ட தீயணைப்பு வண்டிகள்

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வணிக வளாகத்தில் டியூஷன் சென்டர் நடந்த 4-வது மாடியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்துக்கு 21 மாணவர்கள் பலியாகி பலர் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் டியூஷன் சென்டர் உரிமையாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் 2 கூடுதல் மாடிகளை போதிய அனுமதி பெறமால் சட்ட விரோதமாகக் கட்டிய பில்டர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் தீப்பிடித்த மேல் மாடி கூரை நாரால் அமைக்கப்பட்டிருந்ததும் சட்டச்சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

டியூஷன் சென்டர் உரிமையாளர் பார்கவ் புடானி கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மதியத்திற்கு மேல் இந்தக் கட்டிடத்தின் மாடிப்படியில் தீ மூண்டதாகத் தெரிகிறது. உடனேயே டாப் 2 ப்ளோர்களுக்கு தீ பரவியது.  4-ம் மாடியில் டியூஷன் சென்டரில் இருந்த மாணவர்களில் சிலர் இன்று 12ம் வகுப்பு முடிவுகளுக்காகக் காத்திருந்த சோகம் வேறு கதை.

கட்டிடத்திலிருந்து 2 கிமீ  தூரத்தில்தான் தீயணைப்பு நிலையம் இருந்தும் தீயணைக்கும் வண்டிகள் சம்பவ இடத்துக்கு வந்து சேர 40-45 நிமிடங்கள் ஆனதாக நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டினர்.

தீயணைப்பு வண்டிகள் தயாரிப்புடனும் வரவில்லை என்கிறார் இன்னொரு பார்வையாளர், காரணம் அவர்கள் பயன்படுத்திய பைப்பின் பிரஷர் மிகவும் குறைவாக இருந்ததால் தீயை அணைக்க நேரம் பிடித்தது என்றார்.

ஷார்ட் சர்கியூட்டினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தீப்பிடித்ததையடுத்து மாடியிலிருந்து பல மாணவர்கள் கீழே குதித்து படுகாயம் அடைந்ததும் நடந்துள்ளது.

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x