Last Updated : 29 May, 2019 12:07 PM

 

Published : 29 May 2019 12:07 PM
Last Updated : 29 May 2019 12:07 PM

ஆந்திராவில் முழு மதுவிலக்கு: ஜெகன் மோகன் ரெட்டியின் முதல் கையெழுத்தாக இருக்குமா?

ஆந்திர மாநில முதல்வராக நாளை பதவி ஏற்க இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் முதல் கையெழுத்து மாநிலத்தில் முழு மதுவிலக்கு கொண்டுவருவதாக இருக்குமா எனும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தேர்தல் வாக்குறுதியில் மக்களிடம் ஜெகன் மோகன் ரெட்டி அளித்த வாக்குறுதியில் பிரதானமானது மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவருவதாகும். முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அதை நடைமுறைப்படுத்துவேன் எனத் தெரிவித்திருந்தார் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது 'நவரத்தின வாக்குறுதிகள்' எனப்படும் 9 வாக்குறுதிகளை ஆந்திர மாநில மக்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி அளித்தார். அதில் முக்கியமானது மதுவிலக்கு கொண்டு வருவதாகும்.

ஆனால், ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின் வருவாய் பற்றாக்குறையாலும், கடனாலும் சிரமப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியைச் சந்தித்தபோது, ஜெகன் மோகன் மாநிலத்தின் கடன்சுமையைக் குறைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த சூழலில் மதுவிலக்கு கொண்டுவந்தால், மாநிலத்தின் வருவாய் வெகுவாகப் பாதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திர மாநிலம் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வட்டி செலுத்தி வருகிறது. ரூ.2.50 லட்சம் கோடி கடனில் சிக்கி இருக்கிறது என்று ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பிரிக்கப்படாமல் இருந்தபோது மதுவிலக்கு சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டு அது தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகளுக்கு நிதியுதவி, மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், சுகாதாரக் காப்பீடு, நீர்பாசனத் திட்டங்கள் கட்டுமானம், சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தை உயர்த்துதல் ஆகியவை ஜெகனின் முக்கிய வாக்குறுதிகளாக இருக்கின்றன.

ஆனால், இந்த 8 திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு கூடுதலாக ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி வரை தேவைப்படும். அப்படி இருக்கும் மதுவிலக்கு கொண்டுவந்தால், வருவாய்க்கான மாற்று வழியை ஜெகன் மோகன் அரசு  தேட வேண்டியது இருக்கும்.

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் இருந்தபோது மதுவகைகள் மீதான வரி முக்கிய வருவாயாகப் பார்க்கப்பட்டது. அதற்கான உற்பத்தி வரி மட்டும் 2019-20-ம் ஆண்டில் ரூ.7,358 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்த பெண்கள் தங்கள் கணவர்கள் குடியால் அழிகிறார்கள் என்று கண்ணீர்  வடித்தனர். இதனால மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று வாக்குறுதியளித்தார். அதற்கு நல்ல வரவேற்பும் தேர்தலில் கிடைத்தது. இதனால் அதைச் செயல்படுத்த வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தேர்தல் வெற்றிக்குப் பின் ஜெகன் மோகன் ரெட்டி அளித்த முதல் பேட்டியில் கூட " மாநிலத்தில் மதுவிலக்கு கொண்டுவந்து 5 நட்சத்திர ஹோட்டல் வரை கட்டுப்பாடு கொண்டுவருவேன். அவ்வாறு செய்யாவிட்டால், 2024-ம் ஆண்டில் வாக்கு கேட்கமாட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஜன சைதன்ய வேதிகா மாநிலத் தலைவர் வி. லட்சுமணா ரெட்டி மதுவிலக்கை மாநிலத்தில் படிப்படியாக அமல்படுத்துவது குறித்து மாநில அரசிடம் அறிக்கையும்  அளித்துள்ளார். அந்த அறிக்கையில் மதுவகைகள் சில்லறை விற்பனையை அரசு கையில் எடுத்து சப்ளையைக் குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையைப் படிப்படியாகச் செயல்படுத்தவும் ஜெகன் மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் கட்டமாக மாநிலத்தில் மதுவால் உடல்நலத்துக்கும், குடும்பத்துக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணர்வுசெய்யப்பட்டு, மதுக்கடைகள் குறைக்கப்படும்.

2-வது கட்டமாக ஏழைகள், நடுத்தர குடும்பத்தினர் மதுவகைகளை வாங்காத வகையில் விலை உயர்த்தப்படும். இறுதிக்கட்டமாக மதுவகைகள் 5 நட்சத்திர ஹோட்டல்களில் மட்டுமே விற்பனை செய்யப்படும். மற்றவகையில் கள்ளத்தனமாக விற்பனை செய்தால் சிறை தண்டனை விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு முன் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமாராவ் கடந்த 1994-ம் ஆண்டு மதுவிலக்கு கொண்டு வந்தார். இதற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், 1995-ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு மாமனாரின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு முதல்வராக வந்தபோது, அவர் மதுவிலக்கை நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x