Published : 28 May 2019 10:52 AM
Last Updated : 28 May 2019 10:52 AM

மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக அணி

மாநிலங்களவையிலும் விரைவில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350-க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மாநிலங்களவையிலும் பாஜக கூட்டணி விரைவில் பெரும்பான்மையை பெறும் என தெரிகிறது.

மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் ஆளும் கட்சியால் நியமனம் செய்யப்படுபவர்கள். கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சி என்பதால் ஏற்கெனவே நியமன எம்.பி.க்கள் அனைவரும் பாஜக ஆதரவாளர்களாகவே உள்ளனர். பாஜகவுக்கு 73 எம்.பி.க்கள் உள்ளனர். கூட்டணிக்கு 102 இடங்கள் உள்ளன.

அடுத்தாண்டு இறுதிக்குள் 80 மாநிலங்களவை இடங்கள் காலியாக உள்ளன. இதில் உத்தரப்பிரதேசம், பீஹார், குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாஜகவுக்கு 18 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

எனினும் தமிழகத்தில் காலியாகும் 6  இடங்களில் தற்போது அதிமுகவுக்கு 4 இடங்கள் உள்ளன. இது 3 ஆக குறையும். எனவே கூட்டணியின் மூலம் 21 இடங்கள் வரை பாஜக அணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

 இதன் மூலம் பாஜக கூட்டணியின் பலம் மாநிலங்களவையில் 127 ஆக உயரும். இது தனிப்பெரும்பான்மையை விட அதிகம். வரும் ஜூன் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு நவம்பர் வரை 3 கட்டங்களாக நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தல் மூலம் பாஜக அணி இந்த பலத்தை எட்டக்கூடும். இதனால் நாடாளுமன்றத்தில் முத்தலாக் உட்பட நிலுவையில் உள்ள எந்த மசோதாக்களையும் பாஜக அரசு நிறைவேற்றி விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது தவிர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆகிய கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளன. இதனால் எந்த ஒரு மசோதாவும் மாநிலங்களவையிலும் சிரமமின்றி நிறைவேறக்கூடும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x