Last Updated : 31 May, 2019 04:12 PM

 

Published : 31 May 2019 04:12 PM
Last Updated : 31 May 2019 04:12 PM

பிளஸ் 2 மாணவனின் உயிரைப் பறித்த பப்ஜி விளையாட்டு

ஸ்மார்ட்போன் விளையாட்டில் தொடர்ச்சியாக 6 மணிநேரம் விளையாடிய பிளஸ் 2 மாணவன் திடீரென மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.

ஃபுர்கான் குரேஷி, பிளஸ் 2 மாணவர். இவரது குடும்பம் ராஜஸ்தானில் நசிராபாத்தில் குடியேறியவர்கள். மத்தியப் பிரதேசத்திற்கு ஒரு திருமணத்திற்கு போன இடத்தில் தன் மகனை தங்களோடு அரவணைத்துக்கொள்ளாமல், தான் உண்டு தனது ஸ்மார்ட் போன் உண்டு என்றிருந்தவரைக் கவனிக்காமல் அவரது பெற்றோர் விட்டுவிட்டனர்.

விளையாட்டில் தீவிரமாக மூழ்கிய பிறகு என் கேரக்டர் போரில் தோற்றுவிட்டது என்று கத்தியதுதான் மாணவரிடமிருந்து கடைசியாக வந்த வார்த்தைகள். அதன்பிறகு எதையும் செய்ய முடியாமல் பதில்பேச முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சுயநினைவு வராமலே மாணவனின் உயிர் பிரிந்திருக்கிறது.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த மாணவரின் தந்தை ஹரூண் ரஷீத் குரோஷி பிடிஐயிடம் பேசினார்:

''கடந்த 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இச்சம்பவம் நடந்தது. அன்று ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நாங்கள் மத்தியப் பிரதேசம் வந்திருந்தோம்.

ஃபுர்கானைப் பொறுத்தவரை சம்பவம் நடந்த முன்தினமான 27-ம் தேதி திங்கள் கிழமையிலிருந்து இந்த விளையாட்டில் மும்முரமாக இருந்தான். வேறு எதிலும் அவன் கவனம் செலுத்தவில்லை. அவன் தனது ஸ்மார்ட் தொலைபேசியில் பப்ஜி எனப்படும் விளையாட்டில் அவன் ஈடுபட்டிருந்தான். அன்று மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் திடீர் என குண்டுவெடிப்பு குண்டுவெடிப்பு என்று கத்தினான்.

ஃபுர்கான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கக்கூடியவன். ஸ்மார்ட் வீடியோ கேமில் ஈடுபட்ட நேரங்களில் அதாவது ஞாயிறு இரவு தொடங்கி திங்கள் அதிகாலை வரை அதனுள் முழுவதுமாக மூழ்கி அதில் விளையாடிக் கொண்டிருந்தான்.

எங்களோடு திருமண நிகழ்வுக்கு வந்திருந்தவன் காலதாமததாகத்தான் விடியும் நேரத்தில் உறங்கினான். மூன்று, நான்கு மணி நேரமே தூங்கியிருப்பான். மறுநாள் தூங்கி எழுந்தவன் காலை உணவுக்குப் பிறகு மீண்டும் ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டான்.

அவன் இடைவேளையின்றி தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் ஒரே மூச்சாக விளையாடினான். அப்போது திடீர் என ''குண்டு வெடித்துவிட்டது... குண்டு வெடித்துவிட்டது. கேமில் என்னுடைய ஒரு கேரக்டர் போரில் தோல்வியடைந்துவிட்டது'' என்று அவன் கத்தத் தொடங்கினான்.

இவ்வாறு மாணவனது தந்தை தெரிவித்தார்.

சிகிச்சை பலனில்லை

விளையாட்டில் மூழ்கியதால் எந்தவித செயலும் செய்யமுடியாமல் பதில் பேச முடியாத நிலையில் இருந்ததால் மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் சுயநினைவு வராமலேயே மாணவர் உயிர் பிரிந்தது.

இதுகுறித்து இதயநோய் மருத்துவர் அசோக் ஜெயின் கூறுகையில், ''நான் அந்த மாணவரைப் பரிசோதனை செய்தேன். ஆனால் அவர் பேச்சு மூச்சற்று இருந்தார். கிட்டத்தட்ட அவரது இதயம் இயங்குவது நின்றுபோயிருந்தது. நான் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு அவரைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டார்'' என்றார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், மாணவன் உயிரிழந்ததை பெற்றோர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். இதுகுறித்து இன்னும் விசாரணை எதுவும் தொடங்கப்படவில்லை என்றார்.

இதயநோய் நிபுணரின் கருத்து

நடந்து முடிந்துள்ள இத்துயரச் சம்பவம் குறித்து இன்னொரு நகரத்தைச் சேர்ந்த இதய நோய் நிபுணர் விபுல் கார்க் தெரிவிக்கையில், ''குழந்தைகள் இப்போதெல்லாம் மொபைல் போன்களில் போர் விளையாட்டுகள் போன்றவற்றிலே மனரீதியாகவே ஈர்க்கப்படுகிறார்கள். உச்சபட்ச உற்சாகத்திலும் மயக்கத்திலும் அவர்கள் தள்ளப்படுவதால் உணர்ச்சிமயமான வேகத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் இதயம் செயலிழக்கும் நிலைக்கும் செல்கிறார்கள்.

குழந்தைகள் அத்தகைய மொபைல் விளையாட்டுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்'' என்றார்.

கோட்வாலி காவல்நிலைய ஆய்வாளர் அஜய் சார்வான் கூறுகையில், ''மொபைல் போன் விளையாட்டு காரணமாக மாணவன் இறந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. எனவே விசாரணை இதுதொடர்பாக விசாரணை எதுவும் செய்யவில்லை," என்று அவர் கூறினார்.

பிரபலமான இந்த ஸ்மார்ட் போன் விளையாட்டு மாணவர்களின் நடத்தை, மனநிலை, படிப்பு, அவர்கள் பயன்படுத்தும் மொழி எல்லாவற்றையும் பாதிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. குழந்தைகளிடையே வன்முறை நடத்தைகளையும் உருவாக்குவதாக தெரியவந்ததால் குஜராத்தின் சில நகரங்களில் இவ்விளையாட்டு போலீஸாரால் தடை செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x