Published : 11 May 2019 05:15 PM
Last Updated : 11 May 2019 05:15 PM

திருச்சூர் பூரம் விழாவில் ராமச்சந்திரன் யானை பங்கேற்க கேரள அரசு அனுமதி: சிக்கல் தீர்ந்தது

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழாவில் தச்சிகோட்டுகாவூ ராமச்சந்திரன் யானையை நிபந்தனைகளுடன் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதையடுத்து பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. விழாவுக்கு யானைகளை அனுப்ப உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா மே-13ம் தேதி மற்றும் மே 14-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் திருச்சூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான கேரள மக்கள் பங்கேற்பது வழக்கம்.

இங்குள்ள வடக்குன்னாதர் கோயில் முன்புள்ள மைதானத்தில் கண்கவர் யானைகள் அணிவகுப்பு நடைபெறும். தமிழகத்தின் ஜல்லிகட்டு போட்டியை போல, திருச்சூர் பூரம் அம்மாநிலத்தின் கலாச்சார அடையாள விழாவாக கருதப்படுகிறது. 

திருச்சூர் பூரம் விழாவில் ஆண்டுதோறும், பத்தரை அடி உயரமுடைய 54 வயதான தச்சிகோட்டுகாவூ  ராமச்சந்திரன் என்ற யானை அணிவகுப்பில் நடுவில் அழைத்து வரப்படும். பல ஆண்டுகளாக பாரம்பரிய வழக்கப்படி அந்த ராமசந்திரன் யானைதான் மற்ற யானைகளை, அணி வகுப்பில் வழி நடத்திச் செல்லும். இந்த யானையின் கம்பீரத்தை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூடுவர்.

இந்த ஆண்டு பூரம் விழாவில் ராமச்சந்திரன் யானையை அழைத்து வர திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். அந்த யானை கடந்த பிப்ரவரி மாதத்தில் இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த தடை விதிக்கப்பட்டது.

இதுமட்டுமின்றி விலங்கின ஆர்வலர்களும் ராமச்சந்திரன் யானையை பூரம் விழாவுக்கு அழைத்து வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரள அரசு மற்றும் விலங்கின ஆர்வலர்களின் தடை உத்தரவை கண்டித்து பூரம் விழாவில் எந்த யானைகளும் பங்கேற்பதில்லை என கேரள யானைகள் வளர்ப்போர் முடிவெடுத்தனர்.

இதனால் பூரம் விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. பிரச்னையை சுமூகமாக தீர்க்க, யானை உரிமையாளர்கள் உடன் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து ராமச்சந்திரன் யானையை இன்று கால்நடை மருத்துவர்கள் சோதனையிட்டு சான்றிதழ் அளித்தனர். யானைக்கு காயம் ஏதுமில்லை என்பதால் அது விழாவில் பங்கேற்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்த, சில நிபந்தனைகளுடன் 13-ம் தேதி காலை ஒரு மணிநேரம் மட்டும் அலங்கரிக்கப்பட்ட ராமச்சந்திரன் யானையை பேரணியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரன் யானையுடன் 3 பாகன்கள் வர வேண்டும், 3 மீட்டர் இடைவெளியை சுற்றி மற்ற யானைகளை அழைத்து வர வேண்டும். விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பூரம் விழாவுக்கு யானைகளை அனுப்ப அதனை வளர்ப்பவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனால் திட்டமிட்டபடி பூரம் விழா நடைபெறும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x