Last Updated : 13 Apr, 2019 12:00 AM

 

Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM

பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை: தேர்தல் ஆணைய உத்தரவை எதிர்த்த ‘அப்பீல்’ மனு மீது 15-ம் தேதி விசாரணை

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது 15-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘பிரதமர் நரேந்திர மோடி’ என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், பிரதமர் நரேந்திர மோடியாக நடித்துள்ளார். ஓமங் குமார் இயக்கி உள்ளார். இத்திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாவதாக இருந்தது. அன்றைய தினம்தான் மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஆனால், தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், அந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்று கூறி கடந்த 9-ம் தேதி செவ்வாய்க்கிழமை மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து படத்துக்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று தேர்தல் ஆணையம் கடந்த 10-ம் தேதி புதன்கிழமை வெளியிட்ட உத்தரவில், ‘‘மக்களவைத் தேர்தல் முடியும்வரை வாழ்க்கை வரலாற்று படங்களை அரசியல் ஆதாயத்துக்காக மின்னணு ஊடகங்களில் வெளியிட கூடாது. அடுத்த உத்தரவு வரும் வரையில் பிரதமர் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிடக் கூடாது’’ என்று திட்டவட்டமாக கூறியது.

இந்த உத்தரவை எதிர்த்து திரைப்படத் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர், மேல்முறையீட்டு மனுவை 15-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x