Published : 02 Apr 2019 08:49 AM
Last Updated : 02 Apr 2019 08:49 AM

நிசாமாபாத்தில் 178 விவசாயிகள் உட்பட 185 பேர் போட்டி- என்னடா இது... கவிதாம்மாவுக்கு வந்த சோதனை

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை எதிர்த்து நிசாமாபாத்தில் 178 விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இங்கு மொத்தம் 185 பேர் போட்டியிடுவதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், இவிஎம் இயந்திரத்தில்தான் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு ஏப்ரல் 11-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலை முன்னிட்டு

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இவருடைய மகள் கவிதா. பி.டெக் படித்தவர். மிசிசிபியில் கணிப்பொறி அறிவியலில் எம்.எஸ். பட்டம் பெற்றவர். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அமெரிக்காவில் சில காலம் வசித்த கவிதா தற்போது தந்தையின் அரசியல் கட்சிக்கு உதவ இந்தியாவிலேயே தங்கிவிட்டார். தெலங்கானா மாநிலத்தின் நிசாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு முதல்பெண் எம்.பி.யாகவும் ஆனார்.

வரும் மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் கவிதா. இவரை தெலங்கானா மக்கள் ‘கவிதாம்மா’ என்று அழைக்கின்றனர். ஆனால், கடந்த தேர்தலில் இருந்த வரவேற்பு, இந்தத் தேர்தலில் கவிதாவுக்கு இல்லை. இவரை எதிர்த்து 178 விவசாயிகள் உட்பட 184 பேர் போட்டியிடுகின்றனர். இதுதான் தெலங்கானா மாநிலத்தில் இப்போதைக்கு பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.

விவசாயிகளின் நலனுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் எதுவும் செய்யவில்லை என்கின்றனர். அந்தக் கோபத்தில்தான் முதல்வரின் மகளை எதிர்த்து 178 விவசாயிகள் களம் இறங்கி உள்ளனர்.

மஞ்சள் மற்றும் சோளம் ஆகியவற்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி நிர்ணயிக்க தவறிவிட்டது. மஞ்சள் வாரியம் அமைக்கவும் இல்லை என்று விவசாயிகள் புகார் கூறுகின்றனர். எனவே, முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது மகள் கவிதாவை எதிர்த்து 178 பேர் போட்டியிடுகின்றனர். உண்மையில் ஆயிரம் விவசாயிகள் இந்தத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நிராகரிக்கப்பட்டவை போக இறுதியாக 185 பேர் களத்தில் உள்ளனர். இதனால் நிசாமாபாத்தில் கவிதாவுக்கு இந்த முறை பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கவிதாவுக்கு இந்தப் பிரச்சினை என்றால், 185 வேட்பாளர்களை வைத்துக் கொண்டு வாக்குப் பதிவை எப்படி நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்துக்கு பிரச்சினையானது.

அதனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்குப் (இவிஎம்) பதில், நிசாமாபாத் தொகுதியில் பழைய வாக்குச் சீட்டு முறையில் வாக்குப் பதிவு நடைபெறும். இதற்கு தலைமை தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்படும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்தார்.

ஆனால், ‘‘வாக்குச் சீட்டு எல்லாம் வேண்டாம். இவிஎம் இயந்திரங்களையே பயன்படுத்தி வாக்குப் பதிவு நடத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். உங்களுக்குத் தேவையான இவிஎம் இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை

சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரங்களைக் கூடுதலாக அனுப்பி வைக்கிறோம்’’ என்று தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரியிடம் தலைமை தேர்தல் ஆணையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை திட்டவட்டமாகக் கூறிவிட்டது. இதனால் இவிஎம் இயந்திரங்களிலேயே வாக்குப் பதிவு நடக்கவுள்ளது. ஆனால், எத்தனை இயந்திரங்களை வைக்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x